தமிழக எம்.பிக்களுக்கு ஹிந்தியில் பதிலளிப்பது சட்டவிதி மீறல் என மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கூறியுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக அவர் மத்திய உள்துறை அமைச்சர் திருமிகு நித்யானந்தா ராய்க்கு எழுதியக் கடிதத்தில் கூறியதாவது “ உங்களின் 09.11.2020 தேதியிட்ட கடிதம் கிடைக்கப் பெற்றேன். அக்கடிதம் இந்தி மொழியில் இருந்ததால் அதன் உள்ளடக்கம் குறித்து என்னால் அறிய இயலவில்லை. இந்தி மொழியில் பதில் தந்ததன் மூலம், சட்டம் மற்றும் நடைமுறைகள் அப்பட்டமாக மீறப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை அளிப்பதாக உள்ளது.
நான் தங்களுக்கு 9-10-2020 அன்று சி.ஆர்.பி.எஃப் துணை மருத்துவப் பணி நியமனங்களுக்கான தேர்வு மையங்களை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அமைக்க வேண்டுமென்று கோரி கடிதம் எழுதியிருந்தேன். தற்போது வந்துள்ள பதில் அக்கோரிக்கை குறித்ததாகவே இருக்கக்கூடுமென்று நினைக்கிறேன்.
1963 ல் தமிழகம் உள்ளிட்ட இந்திப் பேசாத மாநிலங்களில் அலுவல் மொழியாக இந்தி திணிக்கப்படாது என அன்றைய பிரதமர் ஜவகர்லால் நேரு உறுதியளிதது தாங்கள் அறிந்ததே. இப்பிரச்சினை மீது எழுந்த நாடு தழுவிய விவாதத்தில் பிறந்த கருத்தொற்றுமையின் விளை பொருளே நேரு அவர்களின் உறுதி மொழி.
1965 ல் தமிழகத்தில் நடந்தேறிய வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்தித் திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தின் பின் புலத்தில் அன்றைய பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி அவர்களாலும் இதே உறுதி மொழி திரும்பவும் வழங்கப்பட்டது.
1967 ல் அலுவல் மொழிச் சட்டத்தில் கொண்டு வரப்பட்ட திருத்தத்தின் மூலம் அன்றைய பிரதமர் இந்திரா காந்தி அவர்களாலும் இது உறுதி செய்யப்பட்டது. நான் இங்கு 1976 அலுவல் மொழி விதிகள் (இந்திய ஒன்றியத்தின் அலுவல் தேவைகளின் பயன்பாட்டிற்காக) - (1987, 2007, 2011 ஆண்டுகளில் திருத்தப்பட்டது) ஆவணத்தில் இருந்து சில பகுதிகளை சுட்டிக் காட்ட விழைகிறேன்.
"இந்த விதிகள், அலுவல் மொழிகள் (ஒன்றியத்தின் அலுவல் பயன்பாட்டிற்குரியது) விதிகள் 1976 என்று அழைக்கப்படும். இவை இந்தியா முழுமைக்கும், (தமிழ்நாடு மாநிலம் தவிர்த்து) பொருந்தும்". இச்சட்ட விதிகள் மிகத் தெளிவாக தமிழ்நாடு மாநிலத்துக்கு ஒன்றிய அலுவல் மொழிச் சட்டத்தில் இருந்து விலக்கு பெற்றுள்ளதை குறிப்பிடுகிறது. மொழிப் பிரச்சினையில் தனது நிலையை அழுத்தமாக நிலை நிறுத்துவதில் தனித்துவமான இடம் தமிழ்நாட்டிற்கு இருக்கிறது என்பதை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்கள் என்று எதிர்பார்க்கிறேன். மேற்கூறிய விதி விலக்கு எங்கள் மாநிலத்திற்கு தரப்பட்டதும் அதன் வெளிப்பாடு.
மேலும் அதே விதிகள், "சி" பிரிவில் குழுவாக்கப்பட்டுள்ள மாநிலங்களில் அலுவல் மொழிச் சட்டம் அமலாக்கப்படுவது பற்றிக் குறிப்பிட்டிருக்கிறது. "சி" பிரிவில் இடம் பெற்றுள்ள பகுதியில் உள்ள மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கான மற்றும் அம்மாநிலங்களைச் சேர்ந்த, அலுவலகங்கள் (மத்திய அரசு அலுவலகங்கள் அல்லாதவை), தனி நபர்களுக்கான மத்திய அரசு அலுவலகங்களின் கடிதப் பரிமாற்றங்கள் ஆங்கிலத்திலேயே அமைய வேண்டும்." எனவே இந்தியில் பதில் தருவதான உங்கள் அமைச்சரவையின் நடவடிக்கை இச்சட்ட விதிகளை அப்பட்டமாக மீறுவது ஆகும்.
எப்பொதெல்லாம் நாடாளுமன்ற உறுப்பினரிடம் இருந்து ஆங்கிலத்தில் கடிதம் வரப்பெற்று அதற்கான பதிலை அலுவல் மொழிச்சட்டம் 1963 ன் அடிப்படையில், அதன் விதிகளின்படி, இந்தியில் தர வேண்டியிருந்தால் இந்தி பேசாத மாநிலங்களின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பயன் பெறும் வகையில், அதன் ஆங்கில மொழியாக்க வடிவமும் சேர்த்து அனுப்பப்பட வேண்டும்"
எனவே உங்கள் அமைச்சகம் ஆங்கில மொழியாக்கம் இல்லாமல் இந்தி பேசாத மாநிலங்களின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இந்தியில் பதில் அளிப்பது இந்த அண்மைய அரசாணையையும் மீறுவது ஆகும்.முந்தைய பிரதமர்களால் வழங்கப்பட்ட உயர்வான உறுதிமொழிகள் இன்றைய ஆட்சியாளர்களாலும் மதிக்கப்பட வேண்டுமென்பது எனது ஆழமான உணர்வு. இருப்பினும் அரசாங்கமே சட்டங்களையும் நடைமுறைகளையும் திரும்பத் திரும்ப மீறுவது மனதை வருத்துவதாகும். ஆகவே தமிழ்நாட்டிற்கு மொழிப்பிரச்சினையில் தரப்பட்ட தனித்துவமான உறுதி மொழியை மதித்து அதன் சட்ட ரீதியான அம்சங்களை அமலாக்குமாறு வேண்டுகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.