செய்தியாளர்: ஆர். ரவி
சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் கோவிந்தம்பாளையம் கிராமம், அரசாந்தன் அஞ்சல் பகுதியில் வசித்துவரும் மோகன்ராஜ். இவர் தனது வீட்டின் அருகில் இருக்கும் புளியமரத்தினை அகற்ற கோரி 5.10.2024 அன்று ஆத்தூர் வட்டாசியர் அலுவலகத்திற்கு மனு ஒன்றினை கொடுத்துள்ளார். சம்பந்தப்பட்ட இடத்தை கள ஆய்வு செய்து அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக கூறிவிட்டு சென்றுள்ளனர்.
இருப்பினும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து இரண்டிற்கும் மேற்பட்ட முறை புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், எந்த நடவடிக்கையும் இல்லாததால், மனுவின் நிலைகுறித்து ஆராய தகவல் அறியும் உரிமை சட்டத்தை நாடியுள்ளார் மனுதாரர்.
இதனால், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், சார்பில், மனுதாரரின் கோரிக்கையின் பேரில் உரிய விசாரணை மேற்கொண்டு மனுதாரருக்கு பதில் அளிக்குமாறும், அதன் விபரத்தை வருவாய் கோட்டாசியர் அலுவலகத்திற்கு அனுப்புமாறும் ஆத்தூர் வட்டாசியரிக்கு உத்தரவிட்டிருந்தது.
இதற்கு பதில் தெரிவித்துள்ள வட்டாசியர் அலுவலகம் ,
50 ஆண்டுகளாக சம்பந்தப்பட்டபகுதியில் 2சி புளிய மரம் உள்ளது என்றும், மரத்தின் இலைகள் மனுதாரரின் வீட்டிற்கு இடையூறாக இல்லை என்றும், புளியமரம் உயிர் உள்ள நிலையில் இருப்பதால், மரத்தை அகற்ற வழிவகையில்லை எனவும், இது பலமுறை மனுதாரருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
இந்தநிலையில் , மரத்தின் கீழே தகர விட்டில் வசித்துவரும் சின்னதம்பி என்பவரே புகார் மனு கொடுத்துள்ளார். அதற்கு பதில் அளித்துள்ள வட்டாசியர் அலுவலகம்,
2சி புளியமரமானது மனுதாரரின் வீட்டிற்கு சேதம் உண்டாக்கும் நிலையில் உள்ளதாக விசாரணையில் தெரியவருகிறது என்றும், சம்பந்தப்பட்ட புளிய மரம் அரசு விதிமுறைகளை பின்பற்றி சேதம் உண்டாக்கும் பகுதியை மட்டும் அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக, முதல்முறை புகார் மனு அளித்த மோகன்ராஜிடத்தில் பேசினோம் . அவர் தெரிவிக்கையில், “புளியமரம் வீட்டிற்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் உள்ளது. இதனை சுற்றி நான்கு வீடுகள் அமைந்துள்ளது. அந்த புளியமரத்தின் கீழேயே ஒரு தகர வீடு அமைந்துள்ளது. இதில் 2 கைக்குழந்தைகளோடு ஒரு குடும்பம் வசித்து வருகின்றனர்.
எனவே, மரத்தையே அகற்றகோரி 2 க்கும் மேற்பட்ட முறை மனு அளிக்கப்பட்டது. ஆனால், மனுதாரரின் வீட்டிற்கும் புளியமரத்திற்கு எந்தவித சம்பந்தமும் இல்லை என்று பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து முதல்வர் தனிப்பிரிவிலும் புகார் அளித்துள்ளோம்.
பிறகு, மீண்டும் மனு அளிக்கப்பட்டது. அதில்,புளியமரத்தின் சேதம் உண்டாக்கும் பகுதி மட்டும் அகற்றப்படும் என்று குறிப்பிடப்பட்டது. ஆனால் , தற்போது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மிகவும் சேதமடைந்தநிலையில் மரத்தின் கிளை இருக்கிறது.
சம்பந்தப்பட்ட அலுவலகத்திற்கு இரண்டு நாட்கள் நேரடியாகவே சென்று கேட்டேன். அலுவலகத்தில் பணிபுரியும் அதிகாரிடத்தில் கேட்டேன். அவர்கள் சரியான பதிலை கொடுக்கவில்லை. வேறு இடத்தில் சென்று கேட்கும்படி கூறுகிறார்கள். சம்பந்தபட்ட அதிகாரிகள் வந்து பார்க்கிறார்கள். நடவடிக்கை எடுக்கிறோம், உயரதிகாரிகளிடத்தில் கூறுகிறோம் என்று கூறுகிறார்கள். மேலும், சம்பந்தப்பட்ட பகுதி மட்டுமே அகற்ற முடியும் என்று தெரிவித்துள்ளனர். ஆனால், மரத்தையே அகற்ற வேண்டும் என்றுதான் நாங்கள் புகார் கொடுத்தோம். ஆனால், தற்போதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கிட்டதட்ட 6 மாதங்களாக இதற்காக போராடி வருகிறோம்.“ என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இதுதொடர்பாக, ஆத்தூர் வட்டாசியர் பாலாஜியிடத்தில் தொலைப்பேசி வாயிலாக தொடர்பு கொண்டு பேசினோம். அப்போது பதிலளித்த அவர்,
இது குறித்து முழு விசாரணை மேற்கொள்ளப்பட்டு , இன்னும் ஓரிரு நாட்களில், மனு குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும், முழு மரமும் அகற்றப்படுமா? அல்லது சம்பந்தப்பட்ட பகுதிமட்டும்தான் அகற்றப்படுமா என்பது குறித்து களத்திற்கு சென்று, சம்பந்த அதிகாரிடம் விசாரணை மேற்கொண்டு பதிலளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.