பொது முடக்கத்தால் ஏற்படும் பாதிப்பிலிருந்து விவசாயிகளை காக்கும் பொருட்டு ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட அனைத்து சலுகைகளையும் மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
வேளாண் விளைபொருட்களை சேமித்து வைக்க அரசு கிடங்குகளை மே மாதம் 30ஆம் தேதி வரை கட்டணமின்றி விவசாயிகள் பயன்படுத்தி கொள்ளலாம் என முதலமைச்சர் அறிவித்துள்ளார். கிடங்குகளில் இருப்பு வைக்கப்பட்டுள்ள விளைபொருட்களை அடமானம் வைத்து அதன் பேரில் வழங்கப்படும் பொருளீட்டுக் கடனுக்கான 5 சதவிகித வட்டியை மேலும் ஒரு மாதத்திற்கு செலுத்த வேண்டியதில்லை என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் நாட்களில் மாம்பழ விளைச்சல் அதிகம் இருக்கும் என்பதால் அவற்றை குளிர்பதன கிடங்குகளில் சேமித்து வைக்கும் கட்டணத்தை அரசே ஏற்கும் என்ற சலுகையும் மே இறுதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் விளைபொருட்கள் நியாயமான விலையில் பொதுமக்களுக்கு கிடைக்க ஏதுவாக வியாபாரிகளுக்கான 1 சதவிகித சந்தைக் கட்டணம் ரத்தும் மே இறுதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. காய்கறிகள் மற்றும் பழங்களை குளிர்பதனக் கிடங்கில் பாதுகாத்திட கட்டணம் முழுவதும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக முதலமைச்சர் அறிவித்துள்ளார்.