பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின்
பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் pt web
தமிழ்நாடு

முதல்வரிடம் புயல் பாதிப்பு விவரங்களை கேட்டறிந்த பிரதமர் மோடி... தமிழ்நாட்டுக்கு நிதி விடுவிப்பு!

webteam

மிக்ஜாம் புயல் காரணமாக தமிழகத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சீரமைக்க தமிழக அரசு 5,060 கோடி ரூபாயை மத்திய அரசிடம் கேட்டிருந்தது. இந்நிலையில், பாதிப்புகள் குறித்த விவரங்களை தமிழக முதல்வர் ஸ்டாலினிடம், பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக கேட்டறிந்துள்ளார்.

இதைத்தொடர்ந்து பிரதமர் மோடியை நேரில் சந்தித்து, முதல்வர் கொடுத்த கடிதத்தை வழங்கினார் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு. அதன்பின் பேசிய அவர், “அனைத்து உதவிகளையும் செய்வதாக பிரதமர் உறுதியளித்தார். உடனடி தேவைக்காக ரூ.2,000 கோடி வழங்குமாறு கோரியுள்ளோம்” என்றார்.

இந்நிலையில் மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு முதற்கட்டமாக ரூ.450 கோடி விடுவித்து அறிவிப்பு வெளியிட்டது.

மிக்ஜாம் புயல் காரணமாக தமிழ்நாடு மற்றும் ஆந்திர பகுதிகள் பெரும் பாதிப்பினை சந்தித்தன என்பதால் ஆந்திராவுக்கு முதற்கட்டமாக ரூ. 493.50 கோடி ஒதுக்கப்பட்டது. இந்நிலையில் புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்தினை இன்று மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பார்வையிட்டார். தற்போது முதல்வருடன் ஆலோசனையும் நடத்திவருகிறார் ராஜ்நாத் சிங்.

இதற்கிடையே பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு மத்திய அரசின் பேரிடர் நிவாரண நிதித் திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக ரூ.450 கோடி வழங்கப்படும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்தார்.

அமித் ஷாவின் அந்த அறிவிப்புக்குப்பின் மிக்ஜாம் புயல் பாதிப்புகளை சமாளிக்க, தமிழகத்திற்கு இரண்டாம் தவணை மாநில பேரிடர் நிவாரண நிதியாக 450 கோடி ரூபாயை விடுவிக்க உள்துறை அமைச்சகத்திற்கு பிரதமர் மோடி உத்தரவு பிறப்பித்துள்ளார். புயல் பாதித்த ஆந்திராவிற்கு இரண்டாம் தவணையாக 493.50 கோடி விடுவிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முதல் தவணை விடுவிக்கப்பட்ட நிலையில் தற்போது 2 ஆம் தவணையை மத்திய அரசு விடுவித்துள்ளது.

இதற்கிடையே சென்னையில் வெள்ள மேலாண்மை என்ற புதிய திட்டத்திற்கு ஒப்புதல் அளித்து ரூ. 561.29 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. கடந்த 8 ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள 3-வது பெரிய வெள்ளத்தை சென்னை எதிர்கொண்டுள்ளது. இதை குறிப்பிட்டு, சென்னை பேசின் வெள்ள மேலாண்மை திட்டத்தின் மூலம் வெள்ளத்தை தாங்கக்கூடிய வகையில் சென்னை மாறும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.