அரசு மருத்துவமனை, திருப்பத்தூர் pt web
தமிழ்நாடு

”குழந்தை இறந்திடுச்சு தூக்கிட்டு போ” - அலட்சியமாக சொன்ன செவிலியர்கள்? முற்றுகையிட்ட உறவினர்கள்!

திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சமீரா என்பவருக்கு பிறந்த பெண் குழந்தை இறந்ததாக கூறிய செவிலியர்கள், 'குழந்தை இறந்திடுச்சு தூக்கிட்டு போ' என அலட்சியமாக பேசியதால், குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஆத்திரமடைந்து மருத்துவமனையை முற்றுகையிட்டனர்.

PT WEB

திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சமீரா என்பவருக்கு பிறந்த பெண் குழந்தை இறந்ததாக கூறிய செவிலியர்கள், 'குழந்தை இறந்திடுச்சு தூக்கிட்டு போ' என அலட்சியமாக பேசியதாக கூறி குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஆத்திரமடைந்து மருத்துவமனையை முற்றுகையிட்டனர். பின்னர், போலீசார் மற்றும் மருத்துவ அலுவலர் சமாதானம் செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியைச் சேர்ந்த இணையதுல்லா என்பவருக்கும் திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையைச் சேர்ந்த சமீரா என்பவருக்கும் 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இந்த தம்பதிக்கு இரண்டு வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ள நிலையில் சமீரா மீண்டும் கர்ப்பம் தரித்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று பிரசவத்திற்காக, திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. ஆனால், அந்த குழந்தை இறந்து பிறந்ததாக கூறி செவிலியர்கள் பெற்றோரிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது.

file image

அதுமட்டுமின்றி அங்கிருந்த செவிலியர்கள் "குழந்தை இறந்திடுச்சு இந்தா தூக்கிட்டு போ" என கூறியதாக பாதிக்கப்பட்ட நபர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதனால், ஆத்திரமடைந்த குழந்தையின் பெற்றோர் மற்றும் குழந்தையின் உறவினர்கள் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையின் பிரசவ வார்டை முற்றுகையிட்டு மருத்துவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர், இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த வந்த திருப்பத்தூர் நகர போலீசார் குழந்தையின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்..இதனால் மருத்துவமனை வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது..

அங்கு வந்த மருத்துவ அலுவலர் சிவகுமார், சமாதானம் செய்து வைத்தார். இதையடுத்து, பல மணி நேர பேச்சுவார்த்தைக்கு பின் குழந்தையின் உறவினர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

குழந்தையின் உறவினர்கள்

இது குறித்து திருப்பத்தூர் மாவட்ட தலைமை மருத்துவமனை மருத்துவ அலுவலர் சிவக்குமாரை தொடர்பு கொண்டு கேட்ட போது, "தாயின் வயிற்றில் இருக்கும் போதே குழந்தையின் கழுத்தில் குடல் சுற்றி இருந்தது. அதுமட்டுமின்றி குழந்தைக்கு செல்லவேண்டிய ஆக்சிஜன் அளவும் குறைவாக இருந்தது. இதன் காரணமாக தாயின் வயிற்றிலேயே குழந்தை உயிரிழந்து விட்டது" என்றார்.