தமிழ்நாடு

3 மாதங்களுக்கு பின்னர் சிறைக் கைதிகளை நேரில் சந்தித்த உறவினர்கள்

3 மாதங்களுக்கு பின்னர் சிறைக் கைதிகளை நேரில் சந்தித்த உறவினர்கள்

JustinDurai
சிறையில் உள்ள கைதிகளை உறவினர்கள் கட்டுப்பாடுகளுடன் சந்திக்க நேற்று முதல் அனுமதி அளிக்கப்பட்டது.
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக சிறைகளில் கைதிகளை அவர்களது உறவினர்கள் சந்திக்க கடந்த ஏப்ரல் 27-ம் தேதி முதல் தடை விதிக்கப்பட்டது. அதற்கு மாற்றாக கைதிகள் செல்போனில் வீடியோ கால் மூலம் பேச ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன்படி வீடியோ காலில் கைதிகள் பேசி வந்தனர்.
தற்போது கொரோனா பரவல் குறைந்துள்ளதால் நேரில் சந்தித்து பேச அனுமதிக்கும்படி கைதிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர், உறவினர்கள் கோரிக்கை வைத்தனர். அதையடுத்து முதற்கட்டமாக மத்திய ஜெயில்களில் உள்ள கைதிகளை சில கட்டுப்பாடுகளுடன் நேற்று முதல் சந்தித்து பேச சிறைத்துறை அனுமதி வழங்கியது.
அதன்படி, சிறையில் உள்ள சிறை வாசிகளை சந்திக்க வரும் உறவினர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட சான்றிதழ் அல்லது 72 மணி நேரத்துக்குள் கொரோனா பரிசோதனையில் தொற்று இல்லை என்ற சான்று வைத்திருக்க வேண்டும். சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களை தவிர மற்ற நாட்களில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை சுமார் 15 நிமிடம் சந்திக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நேற்று ஒரேநாளில் 180 சிறைக் கைதிகளை அவர்களின் குடும்பத்தினர், உறவினர்கள் நேரில் சந்தித்து பேசியதாக சிறைத்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.