மோட்டார் வாகன விதிகளை மீறி பைக்குகள் வணிக நோக்கத்திற்கு பயன்படுத்தப்படுவதாக தமிழ்நாடு சாலை போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கம் புகார் அளித்திருந்தனர்.
இந்நிலையில் வணிக நோக்கத்திற்காக பயன்படுத்தப்படும் பைக்குகளை இன்று முதல் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவை, மண்டல அலுவலர்கள், வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கு போக்குவரத்து துறை ஆணையர் பிறப்பித்துள்ளார். மோட்டார் வாகன சட்ட விதிமுறைகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க, சிறப்பு வாகன தணிக்கை மேற்கொள்ள கள அலுவலர்களுக்கு ஆணையிட்டுள்ளார்.
ஒவ்வொரு நாளும் இரவு 7 மணிக்கு அனைத்து மண்டல அலுவலர்கள் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் அறிக்கை அளிக்க வேண்டும் என்றும் போக்குவரத்து துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார். எந்தெந்த வகையில் வணிக ரீதியாக பயன்படுத்தப்படும் பைக்குகள் ஆய்வு செய்யப்படும் என்பது குறித்து தெளிவாக குறிப்பிடப்படாததால், பைக் டாக்சிகளை பயன்படுத்துவோருக்கு சிக்கல் ஏற்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.