டிட்வா புயல் கனமழை எச்சரிக்கை web
தமிழ்நாடு

டிட்வா புயல் | 4 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்.. 14 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட்!

டிட்வா புயல் காரணமாக தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு அதிகனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது..

Rishan Vengai

தென்மேற்கு வங்கக்கடலில் உருவான டிட்வா புயல், சென்னைக்கு தெற்கே 430 கி.மீ தொலைவில் இருந்து வடக்கு-வடமேற்கு திசையில் நகர்கிறது. நாளை அதிகாலை வடதமிழகம், புதுவை அருகே நிலவும் என கணிப்பு. மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட், 14 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகி இருக்கும் டிட்வா புயலானது, தற்போது சென்னைக்கு தெற்கே 430 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, 3 கி.மீ. வேகத்தில் நகர்ந்த புயலின் வேகம், தற்போது அதிகரித்து 7 கி.மீ. வேகத்தில் வடக்கு வடமேற்கு திசையை நோக்கி நகர்வதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை நவம்பர் 30ஆம் தேதி அதிகாலை, வடதமிழகம், புதுவை மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளுக்கு அருகே நிலவக்கூடும் எனவும், சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

டிட்வா புயல்

தொடர்ந்து டிட்வா புயல் தென்மேற்கு வங்கக்கடலிலேயே ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும் என்றும், காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவே சென்னையை வந்தடையும் என வானிலை மையம் கணித்துள்ளது..

இந்த புயல் காரணமாக, தமிழ்நாட்டின் 4 மாவட்டங்களுக்கு நாளை ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

4 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்..

டிட்வா புயல் காரணமாக தமிழகத்தில் மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு முதலிய 4 மாவட்டங்களுக்கும், புதுச்சேரிக்கும் அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது..

மேலும் சென்னை உள்பட புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, சேலம் கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவள்ளூர், இராணிப்பேட்டை முதலிய 14 மாவட்டங்களிலும், காரைக்காலிலும் மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது..

டிட்வா புயல்

டிட்வா புயல் எச்சரிக்கை எதிரொலியாக திருவாரூர், கடலூர், மயிலாடுதுறை, நாகை, கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.. அதேபோல தஞ்சாவூர் மற்றும் விழுப்புரத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் புதுச்சேரி, காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது..