திருச்சி மாவட்டத்திலேயே முதன் முறையாக திருநங்கை ஒருவருக்கு தற்காலிக ஜீப் ஓட்டுநர் பணியை மாவட்ட நிர்வாகம் வழங்கியுள்ளது.
திருச்சி மாவட்டம் சங்கிலியாண்டபுரம் பாத்திமாநகரை சேர்ந்தவர் திருநங்கை சினேஹா. இவருக்கு மாவட்ட வழங்கல் மற்றும் விற்பனை சங்கத்தில் தற்காலிக ஓட்டுநர் பணி வழங்கப்பட்டுள்ளது. இதற்கான பணி நியமன ஆணையை ஆட்சியர் ராஜாமணியிடம் இருந்து பெற்ற சினேஹா, அதன்பின் முறையாக பணியில் சேர்ந்துள்ளார்.
இதுகுறித்து மிகுந்த மகிழ்ச்சி தெரிவித்த சினேஹா "அலுவலகத்தில் பணிபுரியும் சக ஊழியர்கள் தன்னிடம் மிகுந்த அன்பு காட்டுவதாகவும், தனக்கு கிடைக்கப்பெற்றது போல அனைத்து திருநங்கைகளுக்கு வேலைவாய்ப்பு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், திருச்சி மாவட்டத்தில் 25 திருநங்கைகளுக்கு பட்டா நிலம் வழங்கப்பட்டுள்ளதற்கு அரசு மற்றும் மாவட்ட ஆட்சியருக்கு நன்றி தெரிவிப்பதுடன், மீதமுள்ள திருநங்கைகளுக்கும் இடம் மற்றும் வாரிய அட்டை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். பணியுடன் வீணை பயிற்சிக்கும் செல்லும் இவர், தனது சமுதாயத்தின் நலனை மேம்படுத்துவதும், பாதுகாப்பதுமே தனது முக்கிய குறிக்கோள் என கூறிக்கொண்டு ஜீப்பை வேகமாக கிளப்புகிறார்.