தமிழ்நாடு

திருச்சி: ஊராட்சிகளை மாநகராட்சியுடன் இணைக்கும் முயற்சியில் அரசு... எதிர்ப்பும் பின்னணியும்

திருச்சி: ஊராட்சிகளை மாநகராட்சியுடன் இணைக்கும் முயற்சியில் அரசு... எதிர்ப்பும் பின்னணியும்

நிவேதா ஜெகராஜா

திருச்சி மாநகராட்சியை 100 வார்டுகளாக விரிவாக்கம் செய்ய தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி, திருச்சி மாநகராட்சியில் 65 வார்டுகள் மட்டுமே உள்ளன. அதனால் சுற்றுவட்டாரத்திலுள்ள வார்டுகளை இணைப்பது குறித்த அறிவிப்புகள் கடந்த சில தினங்களுக்கு முன் வெளியிடப்பட்டது.

இந்நிலையில், திருச்சி மாநகராட்சியுடன் குண்டூர் ஊராட்சியை இணைக்கும் முடிவை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தி, 
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அக்கிராம மக்கள் 500க்கும் மேற்பட்டோர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருச்சி மாநகராட்சியோடு இணைப்பதற்கு எதிராக முழக்கம் எழுப்பினார்கள். இதில் உள்ளாட்சி பிரதிநிதிகள் சிலர் மட்டும் மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

ஏற்கெனவே நவல்பட்டு, மல்லியம்பத்து உள்ளிட்ட கிராம ஊராட்சிகளைச் சேர்ந்தவர்களும் மாநகராட்சியோடு இணைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தியது குறிப்பிடத்தக்கது. 4 நாள்களுக்கு முன்பு (செப் 2) நவல்பட்டு ஊராட்சியை திருச்சி மாநகராட்சியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து நவல்பட்டு கிராமத்தைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மக்கள், திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பதாகைகளை ஏந்தியபடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நவல்பட்டு கிராமத்திலிருந்துதான், தற்போது திருச்சியில் செயல்பட்டு வரும் மத்திய அரசின் பாதுகாப்புத் துறை நிறுவனங்களான BHEL, HAPP, OFT உள்ளிட்டவற்றுக்கு தேவையான இடம் பெறப்பட்டிருந்தது இங்கே குறிப்பிடத்தக்கது. ஆனால் இதுவரை இந்த கிராமம் வளர்ச்சியடையாமல் இருந்துள்ளது.

தற்போது இந்த நவல்பட்டு ஊராட்சி, மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என அரசு அறிவித்துள்ளதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மாநகராட்சியாக தரம் உயர்த்தினால் விவசாயத்தை நம்பியிருக்கும் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றும், கூடுதல் வரி செலுத்த வேண்டிய நிலை ஏற்படும் என்றும், நூறு நாள் வேலைத் திட்டம் பறிபோகும் எனக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து இரு போராட்டத்தையும் முன்னெடுத்த ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் பேசுகையில், “எங்களுடைய கிராமத்தில் 3,000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. நூறு நாள் வேலைத் திட்டத்தையும், விவசாயத்தையும் நம்பிதான் நாங்கள் இருக்கிறோம். தற்போது ஊராட்சியில் இருந்து மாநகராட்சியாக மாற்றினால் 100 நாள் வேலைத்திட்டம் பறிபோவதுடன் அதிக வரி கட்ட வேண்டிய சூழல் ஏற்படும். இதனால் எங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்படும். ஆகவே எங்கள் ஊராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தக்கூடாது” என்றே அவர்கள் தெரிவித்தனர்.

முன்னதாக மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயிலில் இருந்து போராட்டம் நடைபெறும் இடம் வரை பேரணியாக நவல்பட்டி மக்கள் சென்றிருந்தனர். பின்னர் காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து விட்டு அவர்கள் கலைந்து சென்றனர். இதைத்தொடர்ந்து அடுத்த 4 நாள்களில் இன்னும் சில ஊராட்சிமக்களும் இத்திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்க உள்ளதாக தெரிகிறது.

இப்போதைக்கு அரசின் இந்த இணைப்பு முடிவு குறித்து 25 ஊராட்சிகளிலும் உள்ள உள்ளாட்சி பிரதிநிதிகளிடம் கருத்துகளை கேட்க மட்டுமே அரசு முடிவு செய்திருந்தது. முதற்கட்டமாக, மாநகராட்சியுடனான இணைப்புக்குறித்து, ஊராட்சி மன்ற தலைவர்களுடன், திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் சிவராசு ஆலோசனை நடத்தி கருத்துக்களை கேட்டறிந்தது குறிப்பிடத்தக்கது.