பெண்களை அடிமைகளாக பயன்படுத்தினார்கள் என்று கூறப்பட்ட கால காட்டத்திலேயே பெண்குழந்தைகளையும், பெண்களையும் தெய்வமாக பாவித்து மரியாதை செலுத்தியவர்கள் உசிலம்பட்டி மக்கள். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் பெரும்பாலும் பெண் தெய்வங்களே அதிகமாக காணப்படுகின்றன.
குறிப்பாக உசிலம்பட்டி பகுதியில் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்புவரை ஐந்தாவதாக பிறக்கும் பெண்குழந்தைக்கு பஞ்சவர்ணம், ஆறாவது போதுமணி, பத்தாவது பிறக்கும் பெண் குழந்தைக்கு பத்மாவதி என பெயர் வைத்து பத்திற்கும் மேற்பட்ட பெண் குழந்தைகளை பெற்றெடுத்து வளர்ப்பதுடன், அவர்களுக்கு பிறந்தது முதல் இறப்பு வரை தொடர்ச்சியாக சீர்வரிசைகளை வழங்கி கௌரவித்தது வந்துள்ளதாக வரலாறு கூறுகிறது.
1970ல் இருந்து ஏற்பட்ட கடும்வறட்சி காரணமாக, உசிலம்பட்டியின் ஒரு பகுதி செழிப்புடனும், ஒரு பகுதி வறட்சியிலும் காணப்பட்டதால் நீரைத் தேடி இடம்பெயர்ந்து வெளி மாநிலங்களுக்கு சென்றவர்கள் ஏராளமானோர். இதில் இருப்பிடத்திலேயே சமாளித்து போராடிக் கொண்டிருந்த மக்களுக்கு வறட்சி காரணமாக பொருளாதார பற்றாக்குறை ஏற்பட்டு பெண் குழந்தைகளுக்கு வழங்கப்படும் வரதட்சணையை கொடுக்கமுடியாத சூழலில் கள்ளிப்பால் கொடுத்து பெண்சிசுவை கொலைசெய்யும் பழக்கத்திற்கு அடிமையாகினர்.
இதனை மாற்ற பல்வேறு திட்டங்களை அரசு கொண்டுவந்தாலும் கிராமப்புற பகுதிகளைக்கொண்ட உசிலம்பட்டி பகுதியில் போதிய விழிப்புணர்வு இல்லாததாலும், கல்விக்கான வசதிகள் இல்லாததாலும் இன்றுவரை தொடர்கிறது இந்த பெண்சிசுக் கொலை.
உசிலம்பட்டி பகுதியில் பெண் குழந்தைகளை மீட்டெடுக்க, பெண்களுக்கான கல்வியை வழங்க உசிலம்பட்டியில் உயர்நிலைப்பள்ளிகள், அரசு கல்லூரிகளை உருவாக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுத்துவரும் சூழலில், அரசு உரிய நடவடிக்கைகள் எடுத்து உசிலம்பட்டி பகுதியில் உள்ள பெண் குழந்தைகளை கல்விரீதியாக மேம்படுத்தினால் மட்டுமே முற்றிலுமாக பெண்சிசு கொலைகளை தடுக்க முடியும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.