(விபத்தில் இறந்தவர்கள்)
பழுதடைந்த 108 ஆம்புலன்ஸ் இயக்கப்பட்டதால், 2 பேர் பரிதாபமாக உயிரிழந்ததாக எழுந்த புகாருக்கு ஆம்புலன்ஸ் நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது.
காஞ்சிபுரம் அரசுத் தலைமை மருத்துவமனையிலிருந்து கன்னியம்மாள் என்கின்ற நோயாளியை மேல்சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கடந்த மூன்றாம் தேதி நள்ளிரவு கொண்டு சென்றுள்ளனர். அப்போது செங்கல்பட்டு அருகே சாலை விபத்தில் 108 ஆம்புலன்ஸ் விபத்துக்குள்ளானதில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஜெயக்குமார், நோயாளி கன்னியம்மாள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதனிடையே உயிரிழந்த ஜெயக்குமார், தான் ஓட்டும் 108 வாகனம் பழுதடைந்து இருப்பது குறித்து கடந்த ஜூன் மாதம் 108 ஆம்புலன்ஸ் நிர்வாகத்திற்கு கடிதம் எழுதியிருக்கிறார். ஆனால் புகாருக்கு பின்பும், எந்த ஒரு பராமரிப்பு பணியும் செய்யப்படவில்லை என 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
(மாவட்ட அவசரநிலை நிர்வாக மேலாளர் செல்வமணி)
மேலும் விபத்திற்கு முந்தைய தினம் கூட, வாகனம் கட்டுப்பாடு இல்லாமல் இயங்குவது குறித்து ஜெயக்குமார் கடிதம் எழுதியிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. 108 ஆம்புலன்ஸை முறையாக பராமரிக்காத காரணத்தினாலேயே இந்தச் சாலை விபத்து ஏற்பட்டுள்ளதாக ஒரு குற்றச்சாட்டு நிலவுகிறது.
இதுகுறித்து மாவட்ட அவசரநிலை நிர்வாக மேலாளர் செல்வமணி புதிய தலைமுறைக்கு அளித்த பேட்டியில், “108 ஆம்புலன்ஸில் சரியான பராமரிப்பு இல்லை என்று ஒரு குற்றச்சாட்டு நிலவுகிறது. அது பொய்யான தகவல். இந்த வண்டி கடந்த மே மாதம் மாவட்ட நிர்வாகம் சார்பாக புதியதாக கொடுக்கப்பட்ட வண்டி .கடந்த மாதம் 20-ஆம் தேதி வண்டியை சர்வீஸ் செய்துள்ளோம். வண்டி ஓட்டுநர் இந்த மாதம் இரண்டாம் தேதி ஒரு புகாரை தெரிவித்திருப்பதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு முழுக்க முழுக்க பொய்யானது. அதை அவர் எழுதவில்லை தற்போது அதை மாற்றி எழுதி உள்ளார்கள்.” எனத் தெரிவித்தார்.