தமிழ்நாடு

பொன்பரப்பியில் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் - திருமாவளவன்

webteam

பொன்பரப்பியில் மறுவாக்குப்பதிவு நடத்தப்பட வேண்டுமென, தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.

சென்னையில் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவை சந்தித்து கோரிக்கை குறித்து பேசிய பிறகு திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், அரியலூர் மாவட்டம் பொன்பரப்பியில் வாக்குச்சாவடிக்கு வெளியே நடந்த வன்முறை குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டதை சுட்டிக்காட்டியதாக கூறினார். பொன்பரப்பியில் வாக்காளர்கள் அச்சுறுத்தப்பட்டு, பட்டியலினத்தவர் சுதந்திரமாக வாக்களிக்க முடியாத நிலை ஏற்பட்டதாக அவர் குற்றம்சாட்டினார்.

வாக்களிக்க விடாமல் தடுக்கப்பட்டவர்கள் அளித்த மனுக்கள் சத்யபிரதா சாஹூவிடம் ஒப்படைக்கப்பட்டதாகக் குறிப்பிட்ட அவர், வன்முறைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை கோரி நாளை மறுநாள் அரியலூரிலும், சென்னையிலும் போராட்டம் நடைபெற உள்ளதாகவும் தெரிவித்தார். 

முன்னதாக, தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியில் உள்ள நத்தமேடு பகுதியில் குறிப்பிட்ட சமூகத்தினர் அத்துமீறல்களில் ஈடுபட்டதாகவும், அவர்கள் மற்ற சமூகத்தினரை வாக்களிக்க அனுமதிக்கவில்லை என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. அத்துடன் அரியலூர் மாவட்டம் பொன்பரப்பியில் இருதரப்பு மோதல் ஏற்பட்டு, பானை சின்னம் வரையப்பட்டிருந்த பலரின் வீடுகள் சேதப்படுத்தப்பட்டன. அதைத்தொடர்ந்து பொன்னமராவதியில் இரு சமூகத்தினரிடையே மோதல் ஏற்பட்டது.