பெரியகருப்பன் எக்ஸ் தளம்
தமிழ்நாடு

RBI-ன் நகைக்கடன் விதிமுறைகள் | ”தமிழக கூட்டுறவு வங்கிகளுக்குப் பொருந்தாது” - அமைச்சர் பெரியகருப்பன்

ரிசர்வ் வங்கியின் நகைக்கடன் விதிமுறைகள் தமிழக கூட்டுறவு வங்கிகளுக்குப் பொருந்தாது என அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.

Prakash J

தங்கத்தின் விலை நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டு செல்லும் நிலையில், மறுபுறம் ஏழை-எளிய மற்றும் நடுத்தர மக்கள் அதை வைத்து உடனடி பணத் தேவைகளைப் பெற்று வருகின்றனர். தனியார் நடத்தும் அடகு கடைகளில் வட்டி அதிகம் என்பதால் பெரும்பாலானவர்கள் வங்கிகளிலேயே தங்களது நகைகளை குறைந்த வட்டிக்கு அடகு வைத்து பணம் பெற்று வருகின்றனர். இந்தச் சூழ்நிலையில் நகைக் கடனுக்கு புதிய கட்டுப்பாடுகளை ரிசர்வ் வங்கி விதித்துள்ளது.

அதன்படி, ”தங்கத்தின் மதிப்பில் 75 சதவீதம் மட்டுமே கடன் வழங்க வேண்டும். தற்போது 90 சதவீதம் வரை வழங்கப்படுகிறது. அதாவது, ஒரு லட்சம் மதிப்புள்ள தங்கத்திற்கு அதிகபட்சமாக ரூ.75 ஆயிரம்தான் கடன் வழங்கப்படும். தங்க நகையை அடமானம் வைப்பவர்கள், அதன் உரிமையாளர்களுக்கான ஆதாரத்தைச் சமர்பிக்க வேண்டும். வங்கிகள், தங்கத்தின் மீது கடன் வழங்கும்போது, அந்த தங்க நகையின் தரத்தை உறுதிப்படுத்த ஒரு தரச் சான்றிதழ் வேண்டும். தங்க நகைகள், அலங்காரப் பொருட்கள் மற்றும் குறிப்பிட்ட தங்க நாணயங்கள் மட்டுமே அடமானமாக ஏற்கப்படும். ஒரு நபருக்கு அதிகபட்சமாக ஒரு கிலோ தங்க நகைகள் மற்றும் 50 கிராம் தங்க நாணயங்கள் வரை மட்டுமே அடமானமாக வைக்க அனுமதிக்கப்படும்.

தங்க நகைக் கடன் வழங்குபவர்கள் 22 காரட் தங்கத்தின் விலையை அடிப்படையாக கொண்டு தங்கத்தின் மதிப்பை கணக்கிட வேண்டும். தங்க நகை கடன் வழங்குபவர்கள் அதற்கான ஒப்பந்தத்தில் அடமானமாக வைக்கப்பட்ட தங்கத்தின் விவரம், மதிப்பு, ஏல நடைமுறை போன்றவற்றை சேர்க்க வேண்டும்” உள்ளிட்ட விதிமுறைகளை அறிவித்துள்ளது.

ரிசர்வ் வங்கியின் இந்தப் புதிய அறிவிப்பால் ஏழை எளிய மக்கள் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. இதையடுத்து, ரிசர்வ் வங்கி இத்தகைய திரும்பப் பெற வேண்டும் என்கிற கோரிக்கையும் எழுந்துள்ளது. இந்த நிலையில், ”நகைக்கடன் குறித்த ரிசர்வ் வங்கி விதிகள் தொடக்க வேளாண் வங்கிகளுக்கு பொருந்தாது” என தமிழக அமைச்சர் பெரிய கருப்பன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ நகைக்கடன் குறித்த ரிசர்வ் வங்கி விதிகள் தொடக்க வேளாண் வங்கிகளுக்கு பொருந்தாது. ரிசர்வ் வங்கி விதிகளால் கூட்டுறவு வங்கிகளுக்கு பெரிய அளவில் பாதிப்பு இருக்காது. கூட்டுறவு வங்கிகள் மூலம் ரூ.60 ஆயிரம் கோடி நகை கடன் தரப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.