தமிழ்நாடு

ஆர்பிஐ, மத்திய அரசு கையில்தான் நாட்டின் பொருளாதாரமே உள்ளது - ஜெயரஞ்சன்

ஆர்பிஐ, மத்திய அரசு கையில்தான் நாட்டின் பொருளாதாரமே உள்ளது - ஜெயரஞ்சன்

rajakannan

ரிசர்வ் வங்கியும், மத்திய அரசும் இணைந்து சிறப்பாக செயல்படவில்லை என்றால் நாட்டின் பொருளாதாரம் பாதிப்படையும் என்று பொருளாதார அறிஞர் ஜெயரஞ்சன் கூறியுள்ளார். 

ரிசர்வ் வங்கியின் ஆளுநராக இருந்த உர்ஜித் படேலுக்கும், மத்திய அரசுக்கும் இடையே கடந்த சில மாதங்களாக கருத்து வேறுபாடு நிலவி வந்தது. அதனையடுத்து, தனது ஆளுநர் பதவியை உர்ஜித் படேல் திடீரென ராஜினாமா செய்தார். சொந்த காரணங்களுக்காக ராஜினிமா செய்வதாக அவர் கூறியிருந்தார். ஆனால், அரசியல் அழுத்தம் காரணமாகவே உர்ஜித் படேல் ராஜினாமா செய்துள்ளதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில், புதிய தலைமுறையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பொருளாதார அறிஞர் ஜெயரஞ்சன், பொருளாதார கொள்கைகளை வடிவமைப்பதில் மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் எப்படி செயல்படுகின்றன என்பது குறித்து விரிவாக பேசினார். 

ஜெயரஞ்சன் பேசுகையில், “இரண்டு கொள்கைகள் நாட்டின் பொருளாதாரத்தை பெருமளவு தீர்மானிக்கும். ஒன்று நிதிக் கொள்கை(Fiscal policy). அது ஒன்றிய அரசின் கீழ் உள்ளது. அதாவது ஒவ்வொரு வருடமும் நாட்டிற்கு எவ்வளவு வருமானம் கிடைக்கிறது, அதில் வரவு எவ்வளவு, எந்தெந்த துறைக்கு எவ்வளவு தொகை செலவிடப்படும் என்பது குறித்து நிதி அமைச்சர் வெளியிடுவதுதான் நிதிக் கொள்கை. இந்த நிதிக் கொள்கை முழுமுழுக்க நிதி அமைச்சர், பிரதமர் மற்றும் அவர் கிழ் செயல்படும் அமைச்சரவை ஆகியவற்றின் கட்டுப்பாடில் உள்ளது. 

மற்றொன்று பணவியல் கொள்கை (monetary policy). இந்தக் கொள்கை ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் உள்ளது. எவ்வளவு ரூபாய் நோட்டுக்கள் அச்சடிப்பது, எவ்வளவு பணம் புழக்கத்தில் விடுவது மற்றும் வங்கிகளின் வட்டி விகிதத்தை நிர்ணயிப்பது உள்ளிட்டவை பணவியல் கொள்கை மூலம் உருவாக்கப்படும். 

நிதிக் கொள்கை மற்றும் பணக்கொள்கை ஆகிய இரண்டு கொள்கைகள்தான் நாட்டின் பொருளாதார நடவடிக்கைகளை தீர்மானிக்கும். இதில் ஏதேனும், ஒன்று சரியில்லை என்றாலும் கூட, ஒட்டுமொத்த பொருளாதாரத்தில் பாதிப்பு ஏற்படும்” என்று கூறினார்.