MK stalin, VCK MP Ravikumar pt web
தமிழ்நாடு

Delimitation : "திமுக மட்டும் தனது நிலைப்பாட்டை மாற்றினால்.." - விசிக எம்பி ரவிக்குமார் எச்சரிக்கை

தொகுதி மறுவரையறை திமுக தனது நிலைப்பாட்டை மாற்றினால் அது தமிழ்நாட்டு மக்களுக்கு எதிரானதாக அமையும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் எம்.பி. ரவிக்குமார் புதிய தலைமுறைக்கு தெரிவித்துள்ளார்.

PT WEB

செய்தியாளர் : பாலவெற்றிவேல்

தொகுதி மறுவரையறை விவகாரத்தில் மத்திய அரசு வெளிப்படைத்தன்மையுடன் செயல்படவில்லை என்றும், திமுக தனது நிலைப்பாட்டை மாற்றினால் அது தமிழ்நாட்டு மக்களுக்கு எதிரானதாக அமையும் என்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் எம்.பி. ரவிக்குமார் புதிய தலைமுறைக்கு தெரிவித்துள்ளார்.

புதிய தலைமுறைக்கு அவர் அளித்த பேட்டியில், "தொகுதி மறுவரையறை தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என வலியுறுத்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இதுவரை ஆறு முறை பிரதமருக்குக் கடிதம் எழுதியுள்ளார். ஆனால், இதைப் பொருட்படுத்தாமல் குளிர்காலக் கூட்டத்தொடருக்கு முன்னதாகவே தொகுதி மறுவரையறை மசோதாவைக் கொண்டுவர பாஜக அரசு முயற்சி செய்து வருகிறது.

vck mp ravikumar

தேர்தலுக்கு முன்பு தொகுதி மறுவரையறையை திமுக கடுமையாக எதிர்த்தது. தொகுதி மறுவரையறை மசோதாவின் நகலை அப்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எரித்தார். ஆனால், தற்போது 50 சதவீதம் தொகுதி மறுவரையறை செய்யப்பட்டால் திமுக ஆதரிக்கும் என ஊடகங்களில் செய்திகள் வெளியாகின்றன. திமுக தனது நிலைப்பாட்டை மாற்றக்கூடாது.

மத்திய, மாநில அரசுகளுக்கு இடையிலான உறவுகள் மற்றும் அதிகாரப் பகிர்வு குறித்து ஆய்வு செய்ய திமுக அரசு அமைத்த உயர்மட்டக் குழுவின் தலைவரான நீதிபதி ஜோசப் குரியன், தொகுதி மறுவரையறைக்கு எதிரான கருத்துகளைத் தெரிவித்துள்ளார். தொகுதி மறுவரையறையால் தென் மாநிலங்கள் பாதிக்கப்படும் என்பதையும் அந்தக் குழு தெளிவுபடுத்தியுள்ளது. இத்தகைய சூழலில் திமுக தனது நிலைப்பாட்டை மாற்றுவது தமிழ்நாட்டு மக்களுக்கு எதிரானதாகவும், அவர்களை ஏமாற்றும் செயலாகவும் அமையும்.

தொகுதி மறுவரையறை

தொகுதி மறுவரையறை மசோதா கொண்டுவரப்படாவிட்டாலும், மக்கள் தொகையின் அடிப்படையில் தொகுதிகள் மறுசீரமைக்கப்படும் என்ற நிலை உள்ளது. எனவே, முன்னாள் பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான அரசு செய்ததைப் போல, தொகுதி மறுவரையறைக்கு மேலும் 25 ஆண்டுகள் கால அவகாசம் வழங்குவதுதான் தென் மாநிலங்களுக்கு நியாயமானதாக இருக்கும்.

இதற்கிடையில், மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு எழுதிய கடிதத்தில் திமுக உள்ளிட்ட கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், இந்தப் பேச்சுவார்த்தைகள் எப்போது நடைபெற்றன, அவற்றில் என்ன விவாதிக்கப்பட்டது, மத்திய அரசு என்ன பரிந்துரைகளை முன்வைத்தது என்பது குறித்து வெளிப்படைத்தன்மை இல்லை.

திமுக, சமாஜ்வாதி கட்சி, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் மத்திய அரசு நடத்தியதாகக் கூறப்படும் பேச்சுவார்த்தைகள் குறித்த விவரங்கள் பொதுவெளியில் வெளியிடப்படவில்லை. சம்பந்தப்பட்ட கட்சிகளும் தங்களது நிலைப்பாட்டை இதுவரை தெளிவாக வெளிப்படுத்தவில்லை. இதைப் பார்க்கும்போது, இந்த விவகாரத்தில் ஏதோ மறைக்கப்படுகிறது என்ற சந்தேகம் எழுகிறது.

மேலும், தொகுதி மறுவரையறை ஏற்றுக்கொள்ளப்பட்டால், அதற்காக அமைக்கப்படும் ஆணையத்தின் தலைவராக தற்போது சர்ச்சைக்குள்ளாகியுள்ள ஞானேஷ் குமார் நியமிக்கப்பட வாய்ப்புள்ளது. இத்தகைய சூழலில், தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்கு எவ்வாறு நன்மை கிடைக்கும் என்ற கேள்வியும் எழுகிறது" என ரவிக்குமார் எம்.பி. தெரிவித்துள்ளார்.