'தண்டோரா போடுகின்ற முறை ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை இன்னமும் கீழான நிலையில் வைத்திருப்பதை இந்த உலகிற்கு சொல்கின்ற முறையாக இருக்கின்றது' எனக் கூறியுள்ளார் ரவிக்குமார்.
இதுதொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளரும், விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவிக்குமார் கூறியதாவது:-
''திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் வெங்கடாசலபுரம் கிராமத்தில் உள்ள மானிய நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியர் தண்டோரா அடித்து அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை ஊக்குவித்தும் மாணவர்கள் கல்வி தொலைக்காட்சி வாயிலாக வீட்டிலிருந்து பாடங்கள் படிப்பதன் அவசியத்தையும் அறிவித்துள்ளார். அதை அறிந்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவரை போனில் அழைத்துப் பாராட்டியுள்ளார். தொடர்பு சாதனங்கள் பெருகிவிட்ட நிலையில் தண்டோரா போடும் முறையை ஆசிரியர் ஒருவரே பயன்படுத்துவதும் அதை அமைச்சர் ஊக்குவிப்பதும் வேதனையளிக்கிறது.
நான் சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது 27.05.2006 அன்று, அன்றைய திமுக ஆட்சியின் முதல் பட்ஜெட்டின் மீது பேசுகிற நேரத்தில் “திருக்கோயில்களில் பரிவட்டம் கட்டுகின்ற முறை அகற்றப்படும் என்று முதல் நாளிலேயே தமிழக முதல்வர் அவர்கள் சிறப்பான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்கள். அது சமூகத்தில் சமூக நீதியை, சமத்துவத்தைக் கொண்டு வருவதற்கு உதவியாக இருக்கிறது.
இன்றைக்கும் தமிழ்நாட்டில் அரசின் அறிவிப்புகள் பலவற்றை கிராமப்பகுதிகளில் தண்டோரா போட்டு அறிவிக்கின்ற முறை வழக்கத்தில் இருக்கின்றது. தொடர்பு சாதன வசதிகள் இன்றைக்குப் பல்கிப் பெருகிவிட்ட நிலையில், நாம் உலக நாடுகளுக்கு இணையாக தொலைத்தொடர்பு வசதிகளில் போட்டி போட்டுக் கொண்டிருக்கின்ற இந்த நேரத்தில் தண்டோரா போடுகின்ற முறை ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை இன்னமும் கீழான நிலையில் வைத்திருப்பதை இந்த உலகிற்கு சொல்கின்ற முறையாக இருக்கின்றது.
எனவே அந்த தண்டோரா போட்டு அறிவிப்புச் செய்கின்ற முறையை முற்றாக ஒழித்து உத்தரவிட்டு வரலாற்றில் சிறப்பான ஒரு இடத்தை வகிக்கவேண்டும் என்று உங்களை அன்போடு கேட்டுக் கொள்கின்றேன்” என்று அன்றைய முதலமைச்சர் கலைஞர் அவர்களுக்குக் கோரிக்கை விடுத்தேன்.
அந்த கோரிக்கை இன்னும் நிறைவேற்றப்படாமல் இருக்கிறது. இப்போதுள்ள அரசு அதை நிறைவேற்றுமா? இதை அரசியல் தலைவர்கள் வலியுறுத்துவார்களா?'' என ரவிக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.