தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் உயர்த்தப்பட்ட சர்க்கரை விலை இன்று அமலுக்கு வந்தது. இதனால் ஏழை மக்கள் வேதனையடைந்துள்ளனர்.
ரேஷன் கடைகளில் வழங்கப்படும் சர்க்கரை விலையை ரூ.13.50 லிருந்து ரூ.25-க்கு தமிழக அரசு அண்மையில் உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டது. இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. சர்க்கரை விலை இரு மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளதால் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளதாக பெரும்பாலான மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். எங்கள் வீட்டில் ஆண்கள் வருமானமே இல்லை. எப்படி எங்களால் ஒரு கிலோ சர்க்கரையை ரூ.25-க்கு வாங்க முடியும் என கணவனை இழந்த பெண்களும் தங்களது கஷ்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர். எனவே விலை உயர்வை அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். ரேஷன் கடைகளில் சர்க்கரை விலை உயர்வால், 90 சதவிகிதத்திற்கும் அதிகமான குடும்ப அட்டைதாரர்கள் பாதிக்கப்படுவதாகவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே தமிழகத்தில் மொத்தமாக சுமார் 2 கோடி ரேஷன் அட்டைகள் உள்ளன. இவர்களில் சுமார் 19 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பழைய விலையில் சர்க்கரை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.