ஸ்டான்லி அரசு மருத்துவமனை
ஸ்டான்லி அரசு மருத்துவமனை pt web
தமிழ்நாடு

சென்னை: அரசு ஸ்டான்லி மருத்துவமனை கேண்டீனில் ஜாலியாக உலாவி வடை சாப்பிட்ட எலி; வீடியோ எடுத்த மக்கள்!

Angeshwar G

கேண்டீனில் இருந்த திண்பண்டங்களை எலி சாப்பிட்ட நிலையில் அவற்றை பொதுமக்களுக்கும், நோயாளிகளுக்கும் விற்பதாக புகார் எழுந்தது. இந்நிலையில் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் உள்ள கேண்டீனை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சென்னை ராயபுரத்தில் அமைந்திருக்கக்கூடிய அரசு ஸ்டான்லி மருத்துவமனை தமிழகத்தில் மிக முக்கியமான மருத்துவக்கல்லூரி மருத்துவமனை. சென்னை மக்கள் மட்டுமல்லாது, பிற மாவட்ட மக்களும், பிற மாநில மக்களும் அதிகளவில் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.

இந்த மருத்துவமனையில் தனியாருக்கு சொந்தமான கேண்டீன் உள்ளது. அங்கு நேற்று விற்பனை செய்யப்படும் உணவுப்பொருள் திண்பண்டங்களான பஜ்ஜி, வடைகளின் மீது எலி ஏறிச்செல்லும் காட்சிகளை பொதுமக்கள் பார்த்துள்ளனர். உடனடியாக அதை வீடியோவாகவும் எடுத்துள்ளனர். இதனை அடுத்து கேண்டீன் உரிமையாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

உரிமையாளரோ, “இது விற்பனைக்கான பொருள் அல்ல. நாங்கள் அதைவிற்பனை செய்யமாட்டோம்” என விளக்கமளித்துள்ளார். இதை ஏற்றுக்கொள்ளத பொதுமக்கள் கேண்டீன் உரிமையாளரிடம் தொடர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனை அடுத்து அரசு ஸ்டான்லி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் பாலாஜிக்கு இத்தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன்பேரில் நடவடிக்கை எடுத்த பாலாஜி கேண்டீனை மூட உத்தரவிட்டார். இது போன்ற சம்பவங்கள் இனிமேல் நடக்காமல் இருக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்ற உத்தரவாதத்தையும் அளித்துள்ளார்.

இது தொடர்பன வீடியோ நேற்று எடுக்கப்பட்ட (12/11/23) நிலையில், இன்று (13/11/23) வெளியாகி வைரலாக பகிரப்பட்டு வருகிறது.