தமிழ்நாடு

அடமானம் வைத்த காரை மாற்றுச்சாவி போட்டு எடுத்துச்சென்றதால் கொலை - 4 பேருக்கு சிறை 

அடமானம் வைத்த காரை மாற்றுச்சாவி போட்டு எடுத்துச்சென்றதால் கொலை - 4 பேருக்கு சிறை 

webteam

ராசிபுரம் அருகே அடமானம் வைத்த காரை மாற்றுச்சாவி போட்டு எடுத்துசென்றவரை கொலை செய்த 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த அக்கரைப்பட்டி பகுதியை சேர்ந்தவர் தங்கவேல். இவர் டிரைவராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் கடந்த மாதம் 23-ம் தேதி கணவர் தங்வேலை காணவில்லை என அவரது மனைவி கமலம் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார். 

இதையடுத்து மொளசி காவேரி ஆற்றில் தங்கவேலை போலீசார் சடலமாக மீட்டனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணையும் மேற்கொண்டு வந்தனர். 

இதனிடையே இந்த கொலையில் சம்பந்தப்பட்ட மல்லசமுத்திரத்தை சேர்ந்த சுரேஷ், விஸ்ணு. சீனு (விக்னேஸ்), ரஞ்சித்குமார் ஆகிய 4 பேர் கிராம நிர்வாக அலுவலரிடம் சரணடைந்தனர். பின்னர் வெண்ணந்தூர் காவல்துறையினர் 4 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். 

விசாரணையில் கடந்த சில மாதங்களுக்கு முன் மல்லசமுத்திரம் சுரேஷ் என்பவரிடம் தங்கவேல் தனது காரை அடமானம் வைத்து 1 லட்சத்து 50 ஆயிரம் பணம் வாங்கியது தெரியவந்தது. நீண்டநாட்கள் ஆகியும் அசலையும் வட்டியையும் தங்கவேல் செலுத்தவில்லை எனக் கூறப்படுகிறது. மேலும் தங்கவேல் தான் அடமானம் வைத்த காரை மற்றொரு சாவியை பயன்படுத்தி எடுத்துச் சென்று விட்டதாகவும், இதனால் ஆத்திரமடைந்து தனது நண்பர்களுடன் சேர்ந்து தங்கவேலை அடித்துக் கொலை செய்து காவரி ஆற்றில் வீசியதாக சுரேஷ் வாக்குமூலம் அளித்தார். இதைத்தொடர்ந்து 4 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சேலம் மத்திய  சிறையில் அடைத்தனர்.