நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் அரங்கேறிய குழந்தைகள் விற்பனை விவகாரத்தில், குழந்தைகள் வெளிநாடுகளுக்கும் விற்பனை செய்யப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.
ராசிபுரத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் நல்வினை விஸ்வராஜூ ராசிபுரம் காவல்நிலையத்தில் இந்த புகாரை அளித்துள்ளார். அதில், 2014 ஆம் ஆண்டு சேலம் அரசு மருத்துவமனையில் பிறந்த சேலம் நிலவாரப்பட்டியைச் சேர்ந்த வடிவேல் - அமுதா தம்பதிக்கு பிறந்த பெண் குழந்தை, 8 லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையைச் சேர்ந்த குமாரசாமி பிள்ளை தேவராஜா - பரிமளாதேவி தம்பதிக்கு குழந்தை விற்கப்பட்டதாகவும்,
அவர்கள் திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் வசிப்பது போல போலியான முகவரியில், தாராபுரம் நகராட்சியில் பிறப்புச் சான்றிதழ் தயாரிக்கப்பட்டதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த குழந்தை விற்பனையில் சில இடைத்தரகர்களும், தனியார் மருத்துவமனை மருத்துவரும் உடந்தையாக இருந்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இலங்கைக்கு கடத்தப்பட்ட குழந்தையை மீட்டு டிஎன்ஏ சோதனை நடத்தவேண்டும் என்றும், குழந்தை விற்பனையில் ஈடுபடுபவர்களுக்கு கடும் தண்டனை வழங்கும் வகையில் சட்டத்திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என்றும் வழக்கறிஞர் நல்வினை விஸ்வராஜூ கோரிக்கை விடுத்துள்ளார்.