நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் பச்சிளம் குழந்தைகள் விற்பனை தொடர்பாக கைதான இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
ராசிபுரத்தில் குழந்தைகள் முறைகேடாக விற்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குழந்தைகள் விற்பனையில் ஈடுபட்டதாக ஓய்வு பெற்ற செவிலி அமுதா, அவரது கணவர் ரவிச்சந்திரன், அரசு ஆம்புலன்ஸ் ஓட்டுநர் முருகேசன் மற்றும் தரகர்களாக செயல்பட்டவர்கள் என ஏழு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் குழந்தை விற்பனையில் தொடர்புடைய கூட்டுறவு வங்கி அலுவலக உதவியாளராக பணிபுரிந்த அமுதாவின் கணவர் ரவிச்சந்திரன் மற்றும் கொல்லிமலை ஆம்புலன்ஸ் ஓட்டுநர் முருகேசன் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப் பட்டுள்ளனர்.