வட நெம்மேலி முதலைப்பண்ணையில் பார்வையாளர்களுக்கு காட்சிப் படுத்தப்பட்டுவந்த அரிய வகை வெளிநாட்டு ஆமை காணவில்லை போனதால் மாமல்லபுரம் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அடுத்த கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள வட நெம்மேலி முதலைப்பண்ணையில் பார்வையாளர்கள் கண்டுகளிப்பதற்காக 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முதலைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
ஒருபுறம் இந்த பண்ணையில் முகப்புவாயில் பகுதியில் கம்பி வேலி அமைக்கப்பட்ட ஒரு பகுதியில் அல்டாப்ரா என்ற அரியவகை நான்கு வெளிநாட்டு ஆமைகள் பராமரிக்கப்பட்டு வந்தன. இந்த ஆமைகள் இந்தோனேசியா அருகில் உள்ள காலபாக்சஸ் தீவில் உள்ள நிலப்பரப்பு பகுதிகளில் வாழ்ந்து வருபவை. 1½ மீட்டர் நீளம் வரை வளரும் தன்மைகொண்ட இந்த ஆமைகள் 152 ஆண்டுகள் வரை வாழக்கூடியது. விலங்குகளிலேயே இந்த ஆமைதான் அதிகமான ஆண்டுகள் வாழும் அரிய உயிரினமாகும். முழுக்க முழுக்க புல்,செடிகள் போன்ற தாவரங்களையே உணவாக உட்கொள்ளும்.
இப்படி விலைமதிப்பற்ற இந்த அரியவகை நான்கு ஆமைகளில் பெரிய ஆமை ஒன்று கடந்த சில தினங்களுக்கு முன்பு மக்கள் நடமாட்டம் இல்லாத இரவு நேரத்தில் காணாமல்போனது. கம்பி வேலிக்குள் இருந்த அரியவகை ஆமை காணாமல் போனதால் அதிர்ச்சியடைந்த முதலைப்பண்ணை பராமரிப்பாளர்கள் முதலைப்பண்ணை நிர்வாகத்தினரிடம் தெரிவித்திருக்கின்றனர். அவர்கள் இதுபற்றி மாமல்லபுரம் போலீசில் புகார் செய்தனர்.
புகாரின்பேரில், மாமல்லபுரம் உதவி காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டு அந்த முதலைப்பண்ணையில் பணிபுரியும் ஊழியர்கள் யாராவது ஆமையை திருடி சென்றனரா? அல்லது வெளிநபர்கள் யாராவது இரவு நேரத்தில் முதலைப்பண்ணைக்குள் அத்துமீறி நுழைந்து திருடி சென்றனரா? என பல கோணத்தில் அங்குள்ள சிசிடிவி காமிரா காட்சிப் பதிவுகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.