கொடைக்கானல் உறைபனிப் பொழிவு Pt web
தமிழ்நாடு

20 ஆண்டுகளில் இல்லாத அளவு.. கொடைக்கானலில் உறைபனிப் பொழிவு.!

20 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு டிசம்பர் மாதத்தில் பனிப்பிரதேசமாக அதிகாலை வேலைகளில் மாறியுள்ள கொடைக்கானல் மலைப்பகுதியின் கண்கொள்ளா அழகியல் காட்சிகளை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து வருகின்றனர்.

PT WEB

தமிழ்நாட்டில் குளிர்காலங்களில் குறிப்பாக, பின் பனிக்காலத்தில் கொடைக்கானல் உள்ளிட்ட மலைப் பிரதேசங்களில் நள்ளிரவு, அதிகாலை மற்றும் காலை வேளைகளில் உறை பனிப்பொழிவு இருக்கும். குறிப்பாக, சுட்டெரிக்கும் கடும் வெப்பம் பகலில் நிலவு துவங்கும் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில், ஒரு சில நாட்கள் மட்டுமே உறைப் பனிப் பொழிவு காணப்படும். ஆனால், வடகிழக்கு பருவமழை மழைகாலமான டிசம்பர் மாதத்தில் உறைபனிப் பொழிவு இருக்காது.

கொடைக்கானல் உறைபனிப் பொழிவு

ஆனால், இந்த வருடம் கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு டிசம்பர் மாதத்திலேயே உறைப்பனி பொழிந்து வருகிறது. டிசம்பர்-19 ஆம் தேதி துவங்கிய உறைபனி படியும் நிலை, ஐந்து நாட்களைக் கடந்து ஆறாவது நாளாக தொடர்ந்து சீராக உயர்ந்து வருகிறது. நகரின் ப்ரையன்ட் பூங்கா, ஏரிக்கரையின் சதுப்பு நிலமான கீழ் பூமி, அண்ணா சதுக்கம் உள்ளிட்ட புல்வெளி பகுதிகள், நள்ளிரவு முதல் உறைந்த நிலைக்கு மாறி, கண்கொள்ளாக் காட்சியாக பரந்து விரிந்து காணப்படுகிறது.

இந்நிலையில், இத்தகைய அழகிய எழில் கொஞ்சும் காட்சிகளை சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்து வருகின்றனர். தொடர்ந்து, இன்று அதிகாலை நிலவரப்படி, 4 டிகிரி செல்சியஸ் என, குறைந்தபட்ச வெப்பநிலை, கொடைக்கானல் ஏரி மற்றும் மூஞ்சிகல், பாம்பார்புரம் உள்ளிட்ட நகர் பகுதிகளிலும் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.