பிளஸ் டூ மற்றும் 10ம் வகுப்புக்கு ரேங்க் முறை கைவிடப்பட்டது ஏன் என்று அரசு விளக்கம் அளித்துள்ளது.
மாணவர்களுக்கு ஏற்படும் அதீத மன அழுத்தங்களையும் ஆரோக்கியமற்ற போட்டிச் சூழலையும் தவிர்க்கும் வகையில் ரேங்க் நடைமுறை கைவிடப்படுவதாக அரசு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அரசாணையில், மாணவர்களுக்கிடையேயான போட்டி இன்றைய அளவில் பள்ளிகளுக்கு இடையேயான போட்டியாக மாறியுள்ளதால் மாணவர்களும் பெற்றோரும் கடும் நெருக்கடிக்கு உள்ளாவதாக அரசு கூறியுள்ளது. முதல் தரவரிசை மாணவர்களே கவனிக்கப்படும் நிலையில், கடைநிலை மற்றும் மத்திய நிலை மாணவர்கள் தாழ்வு மனப்பான்மைக்கும், புறக்கணிப்பிற்கும் ஆளாகும் நிலை ஏற்படுவதாகக் குறிப்பிட்டுள்ளது.
போட்டி மயமான கற்றல் சூழ்நிலையில் தாக்குப்பிடிக்க முடியாத பல மாணவர்கள் மன இறுக்கத்திற்கும் சோர்வுகளுக்கும் உள்ளாவதாகவும் தெரிவித்துள்ளது. தெரிதல், அறிதல், புரிதல், பயன்படுத்துதல், வினவுதல், திறனடைதல் என்ற பல்வேறு நிலைகளில் நடைபெறும் ஓர் அழகிய செயல்பாடாக கற்றல் இருக்கிற வேளையில், அதில் எழுத்துப்பூர்வமான தேர்வின் மதிப்பெண்கள் அதீத முக்கியத்துவம் பெற்று ஒரு சில மாணாக்கர்களே போற்றப்படும் நிலை தவிர்க்கப்பட வேண்டிய அவசியம் உள்ளதாக அரசு கருதுகிறது. ஆகையால், மாணவர்களுக்கு ஏற்படும் அதீத மன அழுத்தங்களை , ஆரோக்கியமற்ற போட்டிச் சூழலைத் தவிர்க்கும் வகையிலும் பொதுத்தேர்வு ரேங்க் முறையை கைவிடுவதாக அரசு தெரிவித்துள்ளது.