தமிழ்நாடு

ராணிப்பேட்டை: வங்கி முன்பு ராணுவ வீரரின் 98 வயது மனைவி போராட்டம்

ராணிப்பேட்டை: வங்கி முன்பு ராணுவ வீரரின் 98 வயது மனைவி போராட்டம்

kaleelrahman

ராணிப்பேட்டையில், 20 ஆண்டுகளாக வங்கியில் பணியாற்றிய ஆணையை வழங்காமல் அலைக்கழிப்பதாக வங்கி நிர்வாகத்தை கண்டித்து ராணுவ வீரரின் 98 வயது மனைவி கருப்புக் கொடி ஏந்தியவாறு வங்கி முன் போராட்டத்தில் ஈடுபட்டார்.

ராணிப்பேட்டை மாவட்டம் மேட்டு தெருவைச் சேர்ந்தவர் தேவராஜ், ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற இவர், 2-ம் உலகப்போரில் பங்கேற்றவர். இவர் கடந்த 1950ல் வாலாஜாவில் உள்ள தனியார் வங்கியில் பாதுகாவலராக பணியில் சேர்ந்த நிலையில் 18 ஆண்டுகள் கழித்து 1968ல் உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளார்.

இந்த நிலையில், உயிரிழந்த ராணுவ வீரரான தேவராஜின் குடும்பத்திற்கு வங்கியின் சார்பில் குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும் எனக்கூறி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தற்போது வரையில் அந்த வழக்கு நிலுவையில் உள்ளது. ஆனால் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தேவராஜின் மனைவியான சின்னம்மாள் (98), தனது கணவர் வங்கியில் பணியாற்றியதற்கான சர்வீஸ் ஆர்டரை கேட்டு போராடி வரும் நிலையில், வங்கி நிர்வாகம் அதனை வழங்காமல் அலைக்கழித்து வருவதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த சின்னம்மாள், தன் கணவர் வங்கியில் பணியாற்றியதற்கான ஆணையை வழங்க வேண்டும் என கோரி வாலாஜாபேட்டையில் உள்ள ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியின் முன்பாக வங்கி நிர்வாகத்தை கண்டித்து கருப்பு கொடிகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டார். 98 வயது மூதாட்டியான அவர், வங்கி முன்பு கருப்புக் கொடியை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் காண்போரிடையே சோகத்தை ஏற்படுத்தியது.