தமிழ்நாடு

தமிழக அமைச்சர்களிலேயே அதிக சொத்துடையவர் ராணிப்பேட்டை எம்.எல்.ஏ. காந்தி

sharpana

தமிழக அமைச்சர்களிலேயே அதிக சொத்துடையவர் ராணிப்பேட்டை எம்.எல்.ஏ. காந்தி என்பது, அவர் தாக்கல் செய்த பிரமாணப்பத்திரத்தின் மூலம் தெரியவந்துள்ளது. மிகக் குறைந்த சொத்துடைய அமைச்சர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் பத்மநாபபுரம் எம்.எல்.ஏ.மனோ தங்கராஜ். இது போன்ற பல சுவாரஸ்யமான விடயங்கள் அமைச்சர்களின் பிரமாணப்பத்திரங்கள் மூலம் தெரியவந்துள்ளன.

தேர்தலின் போது தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப்பத்திரம் அடிப்படையில், ராணிப்பேட்டையிலிருந்து தேர்வாகி, கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சராக பதவியேற்றுள்ள காந்திதான், தமிழக அமைச்சர்களிலேயே மிகவும் பணக்காரர். அவரது சொத்து மதிப்பு 47 கோடியே 94 லட்சம் ரூபாய். சொத்தில் மட்டும் அமைச்சர் காந்தி முதலிடம் இல்லை, அதிக கடன் கொண்ட அமைச்சரும் அவர்தான். அவருடைய கடன் மதிப்பு 14 கோடியே 46 லட்சம் ரூபாய். அமைச்சர்கள் மதிப்பில் கடைசி இடத்தில் இருப்பவர் பத்மநாபபுரம் எம்.எல்.ஏவும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சருமான மனோ தங்கராஜ். அவரது சொத்து மதிப்பு வெறும், 23 லட்சத்து 39ஆயிரம்தானாம்.

அவரை தவிர மற்ற 31 அமைச்சர்களும் கோடீஸ்வரர்கள். அமைச்சர்கள் 32 பேரில் 28 பேர் மீது அதாவது, 88 சதவீதம் பேர் மீது குற்ற வழக்குகள் உள்ளன. குறிப்பாக 16 அமைச்சர்கள் மீது கடுமையான குற்றவழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தமிழக அமைச்சர்களில் 72 சதவீதம் பேர் அதாவது 28 அமைச்சர்கள் பட்டப்படிப்பு அல்லது பட்ட மேற்படிப்பு முடித்தவர்கள். அதே சமயம் 9 அமைச்சர்கள் பள்ளிப்படிப்பை தாண்டாதவர்கள்.

32 பேரில் 27 அமைச்சர்கள் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள். 4 அமைச்சர்கள் மட்டுமே 50 வயதுக்குட்பட்டவர்கள். தமிழக அமைச்சரவையில் மோஸ்ட் சீனியர் மோஸ்ட் அமைச்சரின் வயது 83. இந்த விவரங்கள் அனைத்தும், தேர்தலின் போது தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப்பத்திரங்கள் அடிப்படையிலானவையே