செய்தியாளர்: நாராயணசாமி
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை சுங்கச்சாவடி அருகே சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகளை காஞ்சிபுரம் மாவட்டம் சின்ன காஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்தவ பொறியாளர் நரசிம்மன் என்பவர் மேற்பார்வையில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இவர் சாலை அமைக்கும் பணிகளை ஆய்வு செய்து கொண்டிருந்தார். அப்போது தனது மனைவிக்கு போன் செய்து சுங்கச்சாவடியில் பணியாற்றி வருவதாக தெரிவித்துள்ளார்.
இதையடுத்து அன்று இரவு முழுவதும் வீட்டுக்கு வராததால், கடந்த 22.05.2025 வியாழன் அன்று மாலை காணாமல் போன நரசிம்மனை சாலை பணியாளர்கள் மற்றும் அவரது உறவினர்கள் பல மணி நேரமாக தேடியும் கிடைக்காததால் சம்பவம் குறித்து வாலாஜாபேட்டை காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தனர். அதன் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த வாலாஜாபேட்டை போலீசார், காணவில்லை என காவல்துறை அறிவிப்பினை வெளியிட்டனர். மேலும் அருகாமையில் உள்ள காவல் நிலையங்களுக்கு தகவல்கள் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், நரசிம்மன் காணாமல் போனதாக கூறப்படும் பக்கிரி மலை அடிவாரத்தில் உள்ள ஓடையில் அருகே அரை நிறுவனத்தில் மயங்கி நிலையில் ஆண் ஒருவர் கிடப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் அப்பகுதிக்கு காவலர்கள் விரைந்து சென்றனர். காவலர்கள் வருவதற்குள் அங்கிருந்தவர்கள் ஜேசிபி வாகனம் மூலம் மயங்கிய நபரை மீட்டு சாலைக்கு கொண்டு வந்தனர். இதையடுத்து அவர், காணாமல் போன நரசிம்மன் என்பது தெரியவந்தது இதைத் தொடர்ந்து அவரை வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில் நரசிம்மன், இயற்கை உபாதை கழிக்கச் சென்ற இடத்தில் மயங்கி விழுந்தது தெரிய வந்துள்ளது. போலீசார் தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.