தமிழ்நாடு

ராணிப்பேட்டை: பேக்கரியில் சாண்ட்விஜ் சாப்பிட்ட 3 சிறுவர்கள் மருத்துவமனையில் அனுமதி

webteam

ராணிப்பேட்டை பேக்கரியில் சாண்ட்விச் சாப்பிட்ட மூன்று சிறுவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்னர்.

ராணிப்பேட்டை பஜார் வீதி அருகே உள்ள பேக்கரியில் சாண்ட்விஜ் சாப்பிட்ட சைமன் (10), ரூபன் (7), ஜான்சன் (9) ஆகிய மூவருக்கும் உணவு ஒவ்வாமை, வயிற்றுப்போக்கு ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆற்காடு அருகே கோட்டைமேட்டு தெரு பகுதியைச் சேர்ந்தவர் சாலமன். இவர் தனது குடும்பத்துடன் ராணிப்பேட்டைக்கு சொந்த வேலைக்காக சென்றுள்ளார். அப்போது பஜார் வீதியில் உள்ள பேக்கரியில் தேநீர் அருந்துவதற்காக சென்றுள்ளார். அப்போது சாலமனும் அவரது மனைவி ரூபியும் தேநீர் சாப்பிட்ட நிலையில் சிறுவர்களான சைமன் (10), ரூபன் (7) மற்றும் ஜான்சன் (9) ஆகிய மூவரும் சாண்ட்விஜ் ஆர்டர் செய்து சாப்பிட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து வீட்டிற்குச் சென்ற மூன்று சிறுவர்களுக்கும் வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. உடனடியாக மூவரையும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தபோது உணவு ஒவ்வாமை ஏற்பட்டதே காரணம் என மருத்துவர்கள் கூறியதாகத் தெரிகிறது. இதனைத் தொடர்ந்து சிறுவர்களின் உறவினர்கள் கொடுத்த புகாரின் பேரில், உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் போலீசார் உதவியோடு பேக்கரியில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது உணவு தயார் செய்யும் இடத்திலிருந்து நிறத்தை கூட்ட பயன்படும் ரசாயன நிறமிகளை பறிமுதல் செய்தனர். மேலும் கடையிலிருந்த சாண்ட்விஜ் மற்றும் இதர உணவுப் பொருட்களை சோதனைக்காக எடுத்துச் சென்றதோடு, பேக்கரியை தற்காலிகமாக பூட்டிவிட்டுச் சென்றனர். மேலும் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பேக்கரி கடைகளில் மாவட்டம் முழுவதுமாக சோதனை நடைபெறும் எனத் தெரிவித்தனர்.