புனித மாதமான ரமலான் முழுவதும் 30 நாட்களுக்கு நோன்பு கடைபிடிக்கப்படும். இதையடுத்து 30வது நாளில் பிறை தெரிந்ததும் அடுத்த நாள் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும். ரம்ஜான் பண்டிகை நாளை கொண்டாடப்படும் என பல்வேறு மாநிலங்கள் அறிவித்து இருந்தன. இதனால், ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து இருந்தது.
இந்நிலையில், தமிழகத்தில் பிறை தெரியாததால், நாளை மறுநாள் ரமலான் கொண்டாடப்படும் என அரசு தலைமை காஜி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இதனால், ரம்ஜான் காரணமாக அறிவிக்கப்பட விடுமுறையை தமிழக அரசு ரத்து செய்துள்ளது. தமிழகத்தில் பள்ளிகள் நாளை வழக்கம்போல் செயல்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. ரம்ஜான் நாளை மறுநாள் கொண்டாடப்படுவதால் சனிக்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல், ரம்ஜான் பண்டிகை காரணமாக அரசு அலுவலகங்களுக்கு அறிவிக்கப்பட்ட விடுமுறையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
அதனால், அலுவலகங்களும் நாளை இயங்கும்.மூன்று நாள் விடுமுறை என நினைத்து பலரும் சொந்த ஊர் செல்ல முன்பதிவு செய்தும், கிளம்ப உள்ள நிலையில் விடுமுறை ரத்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.