தமிழ்நாடு

தேசத்துரோக வழக்கு : “வேற லெவலில் விமர்சிப்பேன்” என்ற ரம்யா

தேசத்துரோக வழக்கு : “வேற லெவலில் விமர்சிப்பேன்” என்ற ரம்யா

webteam

நடிகையும், காங்கிரஸ் நிர்வாகியுமான ரம்யா என்கிற திவ்யா மீது தேசத்துரோக வழக்கு பதியப்பட்டுள்ள நிலையில், பிரதமரை மேலும் விமர்சிப்பேன் என அவர் தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் ரம்யா. இவர் தமிழிலும் சில படங்களில் நடித்துள்ளார். காங்கிரஸ் கட்சியில் இணைந்து பணியாற்றி வரும் இவர், கர்நாடகாவில் இருந்து மக்களவை உறுப்பினராக ஒரு முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர். அதன்பின் 2014ஆம் மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தவர். தற்போது காங்கிரஸ் கட்சியின் சமூக வலைத்தளங்கள் பிரிவின் தலைமைப் பொறுப்பை கவனித்து வருகிறார். இவர் இப்பொறுப்பிற்கு வந்தப் பிறகு அதிகமான பெண்களை, காங்கிரஸ் தொழில்நுட்பப் பிரிவில் இணைத்தார். 

இவர் தொடர்ந்து பாஜகவினர் மற்றும் பிரதமர் உள்ளிட்ட மத்திய அமைச்சர்களை விமர்சித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவுகளை வெளியிட்டு வந்தார். இந்நிலையில் கடந்த 24ஆம் தேதி இவர் வெளியிட்ட ஒரு பதிவில், பிரதமர் மோடி மெழுகுச்சிலையில் அவரே தனது கையால் திருடன் என எழுதுவதுபோல சித்தரிக்கப்பட்டிருந்தது. இந்த புகைப்படத்தை எதிர்த்து, உத்தரப்பிரதேசத்தில் உள்ள பாஜக ஆதரவாளரான சையது ரிஸ்வான் என்ற வழக்கறிஞர் புகார் அளித்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் ரம்யா மீது தேசத்துரோக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இந்நிலையில் தன் மீது பதிவு செய்யப்பட்டுள்ள தேசத்துரோக வழக்கு தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள ரம்யா, இந்தியாவில் தேசத்துரோக வழக்கு தவறாக பயன்படுத்தப்படுகிறது என குற்றம்சாட்டியுள்ளார். அத்துடன் தனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி எனவும், தனது ட்விட்டை பிடிக்காதவர்கள் தான் சொல்லிக்கொள்வது என்ன வென்றால், அடுத்த முறை இன்னும் ‘சிறப்பாக விமர்சிப்பேன்’ என்றும் தெரிவித்துள்ளார்.