தமிழ்நாடு

உரம் மூட்டைக்கு மாலை அணிவித்து விவசாயிகள் போராட்டம்

உரம் மூட்டைக்கு மாலை அணிவித்து விவசாயிகள் போராட்டம்

webteam

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே உர தட்டுப்பாட்டை போக்கவும் பயிர் காப்பீட்டு தொகையை முறையாக வழங்க வலியுறுத்தியும் விவசாய சங்கத்தின் சார்பில் உரம் மூட்டைக்கு மாலை அணிவித்து நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கடலாடி அருகே சிக்கல் பகுதிகளில் விவசாயிகள் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தங்களது நிலங்களை உழுது நெல் விதைகளை மானாவாரி பயிராக விதைத்திருந்தனர். இந்த நிலையில் தற்போது நெல் பயிர்கள் நன்றாக வளர்ந்து உள்ள நிலையில் வடகிழக்கு பருவமழை காரணமாக வயல்வெளிகளில் மழைநீர் அதிகளவில்  தேங்கியுள்ளது. 

அந்த பயிர்களுக்கு உரமிடுவதற்காக தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி மற்றும் வேளாண் துறை அலுவலகத்தில் விவசாயிகளுக்கு போதிய உரம் கிடைக்காமல் விவசாய பரிதவித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் தனியார் உரக்கடைகள் உரங்களை 100 ரூபாய் முதல் 200 ரூபாய்கள் வரைக்கும் அதிக லாபம் வைத்து விற்பதாகவும் விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர். 

இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பல முறை கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என விவசாயிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர்.

இதனால், ஆத்திரமடைந்த விவசாய சங்கத்தினர் உரம் மூட்டைக்கு மாலை அணிவித்து நூதன முறையில் சிக்கல் பேருந்து நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.