ராமேஸ்வரம் அருகே உள்ள ஓலைகுடா, சங்குமால் லைட் ஹவுஸ் மற்றும் பாம்பன் தெற்கு வாடி உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை திடீரென வழக்கத்துக்கு மாறாக சுமார் 100 மீட்டர் முதல் 300 மீட்டர் தொலைவிற்கு கடல் உள் வாங்கியது, இதனால் கடலுக்கு அடியில் உள்ள உயிரினங்கள், கடல் பாசிகள் வெளியில் தெரிந்தது. அடிக்கடி இந்த நிகழ்வு நடைபெறுவதால் மீனவர்கள் படகுகளை பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு சென்றதால் இழப்புகளை தவிர்த்ததாக தெரிவித்துள்ளனர்.
சுனாமிக்கு பின்பு தனுஷ்கோடி, மண்டபம், பாம்பன் ராமேஸ்வரம், தெற்குவாடி, குந்துகால் உள்ளிட்ட பகுதிகளில் கடல் உள்வாங்குவதும், கடல் சீற்றத்துடன் காணப்படுவதும், நீரோட்டம் மாறுவதும் அடிக்கடி நிகழ்வதால், பாரம்பரிய மீனவர்கள் மத்தியில் ஒருவித அச்சம் ஏற்பட்டுள்ளது. மீனவர்களின் அச்சத்தையும் கரையோரங்களில் வசித்துவரும் குடியிருப்பு வாசிகளின் அச்சத்தை போக்க கடல்சார் ஆராய்ச்சியாளர்கள் பருவநிலை மாற்றம் குறித்து ஆய்வு செய்து மீனவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடல் உள் வாங்கியதால் ஏராளமான நாட்டுப் படகுகள் இன்று மீன் பிடிக்கச் செல்ல முடியவில்லை. இயல்பு நிலைக்கு திரும்பினால் மட்டுமே மீன் பிடிக்கச் செல்ல முடியும் எனவும் வேதனை தெரிவித்தனர்.