தமிழ்நாடு

பாம்பன் பாலத்தில் அதிவேகத்தில் வரும் வாகனங்கள்-சிசிடிவி பொருத்தி நடவடிக்கை எடுக்க கோரிக்கை

webteam

பாம்பன் பாலத்தில் 30 கிலோமீட்டர் வேகத்தில்தான் வாகனங்கள் செல்ல வேண்டும் என்று விதிமுறைகள் இருந்தும் அசுர வேகத்தில் செல்லும் வாகனங்களால் அடிக்கடி ஏற்படும் விபத்துகளை கட்டுப்படுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனர்.

மண்டபம் நிலப்பரப்பையும், ராமேஸ்வரம் தீவையும் இணைப்பதற்காக கடந்த 1988-ம் ஆண்டு பாம்பன் சாலை பாலம் கட்டி முடிக்கப்பட்டு போக்குவரத்து பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. இந்நிலையில் கடந்த 1997-ம் ஆண்டு அரசுப் பேருந்து ஒன்று பாம்பன் பாலத்தின் தடுப்புச் சுவர்களில் மோதி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கடலுக்குள் விழுந்து விபத்துக்குள்ளானதில் பேருந்தில் பயணம் செய்த குழந்தை உள்பட 8 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

மேலும், நாள்தோறும் வெளி மாவட்டம் மற்றும் மாநிலத்தில் இருந்து ஆயிரக்கணக்கான வாகனங்கள் ராமேஸ்வரம் தீவு பகுதிக்கு வந்த வண்ணம் இருக்கின்றனர். ராமேஸ்வரம் தீவு பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் சுற்றிப் பார்க்கக் கூடிய இடங்களாக இருக்கக்கூடிய தனுஷ்கோடி, முகந்தராயர் சத்திரம், கோதண்டராமர் கோயில், ராமர் பாதம், அப்துல் கலாம் நினைவிடம் உள்ளிட்ட பகுதிகளை சுற்றிப் பார்த்தப் பின்னர், பாம்பன் சாலை பாலத்தில் இருந்து கடல் அலையை ரசிப்பதற்காக சுற்றுலாப் பயணிகள் தங்களுடைய வாகனங்களை சாலைப் பாலத்தின் இரு புறங்களின் நிறுத்தி வைக்கின்றனர். இதனால் அவ்வப்போது பாலத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு விபத்துகளும் நேர்ந்து வருகிறது.

பாம்பன் சாலை பாலத்தில் வாகனங்களை நிறுத்தக்கூடாது, பாலத்தில் செல்லக்கூடிய வாகனங்கள் 30 கிலோமீட்டர் வேகத்தில் தான் செல்ல வேண்டும் என்ற விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் ராமேஸ்வரம் தீவுப் பகுதிக்கு வரும் சுற்றுலா வாகனங்கள், தனியார் பேருந்துகள் ஆகியவை அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் அசுர வேகத்தில் வருவதினால் விபத்துகள் நேர்ந்து உயிரிழப்புகளும் அடிக்கடி அதிகரித்து வருகிறது.

மேலும் வரக்கூடிய சுற்றுலாப் பயணிகள் தங்களுடைய வாகனங்களை இயக்குவதை கவனம் செலுத்தாமல், கடல் அலையினை பார்த்து கவனத்தை சிதற விடுவதாலேயே விபத்துக்கள் அதிகளவில் நடப்பதாகவும் வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் வெளி மாவட்ட மற்றும் மாநிலத்திலிருந்து வரக்கூடிய சுற்றுலாப் பயணிகளின் வாகனங்கள் விபத்து நேர்ந்தால், அவைகள் காவல்துறையின் கவனத்திற்கு செல்லாமலே அவர்களாகவே பேசி முடித்து சென்று வருவதும் அதிகரித்து வருகிறது.

இதற்கு காவல்துறையினர் பாம்பன் சாலை பாலத்தில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தி, 24 மணி நேரமும் காவலர்களை பணியில் அமர்த்தி கண்காணிக்கப்பட வேண்டும் என்றும், வெளிநாடுகளில் அதிக வேகத்தில் செல்லும் வாகனங்களை கேமரா மூலம் புகைப்பட எடுத்து அபதாரம் விதிக்கப்படுவது போன்று பாம்பன் பாலத்திலும் கொண்டுவரப்பட்டால் விபத்துகளை குறைக்கலாம் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

- விஸ்வநாதன்