investigation
investigation pt desk
தமிழ்நாடு

ராமேஸ்வரம்: தொடரும் கடத்தல் சம்பவம் - நடுக்கடலில் வீசப்பட்ட மர்ம பொருள்... அதிகாரிகள் விசாரணை

webteam

செய்தியாளர்: அ.ஆனந்தன்

ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி கடல்பகுதி இலங்கைக்கு மிக அருகே உள்ளது. இங்குள்ள வேதாளை, மரைக்காயர்பட்டினம், மண்டபம் உள்ளிட்ட தெற்கு கடல் பகுதியில் இருந்து இலங்கைக்கு சமீபகாலமாக போதைப் பொருட்கள் அதிக அளவு கடத்தப்பட்டு வருகிறது. மட்டுமன்றி இலங்கையில் இருந்து நாட்டுப் படகுகள் மூலமாக தமிழகத்திற்குள் தங்கம் கடத்திவரப்பட்டும் வருகிறது.

Boat

இந்நிலையில் திருச்சியில் உள்ள மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினருக்கு இன்று அதிகாலை இலங்கையிலிருந்த நாட்டுப்படகு மூலம் தங்கம் கடத்திவரப்படுவதாக தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து இந்திய கடலோர காவல் படையுடன் இணைந்து மண்டபம் தெற்கு மன்னார் வளைகுடா கடல் பகுதியில் தீவிர சோதனை நடத்தினர். அப்போது நடுக்கடலில் பாம்பன் புயல் காப்பகம் பகுதியைச் சேர்ந்த ரெபிஸ்டன் என்பவர் ஓட்டி வந்த நாட்டுப்படகை தடுத்து நிறுத்தி விசாரித்தனர்.

அப்போது அதில் இருந்தவர்கள் முன்னுக்கு பின் முரனாக பதில் அளித்தத்தால் இந்திய வீரர்கள் நாட்டுப்படகில் ஏறி சோதனை செய்தபோது, சுமார் 50 கிலோவிற்கும் அதிகமான கஞ்சா ஆயில் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து போதைப்பொருளை பறிமுதல் செய்ததுடன் படகில் இருந்த ரெபிஸ்டன் உட்பட மேலும் ஒருவரை மண்டபம் கடலோர காவல்படை முகாமிற்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்தினர்.

investigation

முதற்கட்ட விசாரணையில், மண்டபம் தெற்கு மீன்பிடி துறைமுகம் அருகே உள்ள கடல் பகுதியில் பார்சல் ஒன்றை வீசியதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து இந்திய கடலோர காவல்படை ஸ்கூஃபா வீரர்கள் தொடர்ந்து தீவிரமாக தேடி வருகின்றனர்.

இந்நிலையில், பாம்பன் புயல் காப்பகம் பகுதியில் உள்ள ரெவிஸ்டன் வீட்டில் தங்கச்சிமடம் போலீசார் உதவியுடன் மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் மற்றும் ராமேஸ்வரம் சுங்கத்துறை அதிகாரிகள் ஒருமணி நேரத்திற்கும் மேல் முழுமையாக சோதனை செய்தனர். ஆனால், எதுவும் கிடைக்காததால் அங்கிருந்து ஏமாற்றத்துடன் அதிகாரிகள் புறப்பட்டுச் சென்றனர்.

இந்த சம்பவம் குறித்து மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள், மண்டபம், பாம்பன், வேதாளை, மரைக்காயர்பட்டினம் உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் தொடர்ந்து சோதனை செய்து வருவதுடன், கடத்தல் சம்பவம் குறித்தும் பலரிடம் விசாரித்து வருகின்றனர்.