தமிழ்நாடு

இலங்கை கடற்படையை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் 2வது நாளாக போராட்டம்

kaleelrahman

ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்ததை கண்டித்து 2வது நாளாக மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து 700-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த போது இராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் 12 பேரையும், ஒரு விசைப்படகையும் இலங்கை கடற்படை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி கைது செய்து சிறையில் அடைத்தது.

இதையடுத்து ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் மீனவர்கள் நேற்று முன்தினம் அவசர ஆலோசனை நடத்தி நேன்று ஒருநாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக தீர்மானம் நிறைவேற்றினர். இதையடுத்து இலங்கை கடற்படையை கண்டித்து மீனவர்கள் கடலுக்குச் செல்லாமல்; நேற்று வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் இன்று 2-வது நாளாக 800க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லாமல் தங்களுடைய படகுகளை நங்கூரமிட்டு நிறுத்தி வைத்துள்ள மீனவர்கள், நாளை கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல திட்டமிட்டுள்ளனர்.