தமிழ்நாடு

ராமேஸ்வரம்: பாம்பன் அன்னை இந்திராகாந்தி சாலை பாலத்தின் வயது 33...!

kaleelrahman

பாம்பன் அன்னை இந்திராகாந்தி சாலை பாலம் 33-வது ஆண்டு சேவையில் இன்று அடியெடுத்து வைக்கிறது. 

கடந்த 1974 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 17-ஆம் தேதியில், அன்றைய பாரத பிரதமர் இந்திரா காந்தியால் ராமேஸ்வரம் அருகே பாம்பன் கடலில் பாலம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் துவங்கியது. பல்வேறு முறை தடைப்பட்ட பாலத்தின் பணி 1988 அக்டோபர் 2ம் தேதியன்று அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தியால் திறந்து வைக்கப்பட்டு போக்குவரத்து துவங்கியது. இந்த பாலத்திற்கு அன்னை இந்திரா காந்தி சாலை பாலம் என பெயரிடப்பட்டது. 

அன்று முதல் ரயிலை மட்டுமே நம்பி ராமேஸ்வரம் வந்த சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள், வாகனங்களில் எப்போது வேண்டுமானாலும் ராமேஸ்வரம் சென்று திரும்பலாம் என்ற நிலை உருவானது. இதனால் ராமேஸ்வரத்திற்கு வரும் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. மேலும், இப்பகுதியில் வசிக்கும் மீனவர்கள் கடலில் பிடிக்கும் மீன்களை உடனுக்குடன் வாகனங்களில் ஏற்றி வெளியூர்களுக்கு எடுத்துச் செல்லும் வாய்ப்பும் உருவானதால் மீன்பிடித் தொழிலும் ஏற்றம் பெற்றது. 

பாலம் கட்டிமுடிக்கப்பட்ட நாள் முதல் இன்று வரை புயல், மழை என எதுவந்தாலும் தடையின்றி வாகன போக்குவரத்தில் முத்திரை பதித்து வரும் அன்னை இந்திரா காந்தி சாலை பாலம் தனது தொடர் சேவையில் 33-ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. தற்போது பாம்பன் கடலில் ஆயிரத்து 250 கோடி ரூபாய் செலவில் 8 வழித்தடத்துடனுன் அனைத்து வசதிகளுடனுன் புதிய சாலை பாலம் கட்டுவதற்கு மத்திய அரசு திட்டமிட்டு இதற்கான முதல்கட்ட ஆய்வுகளை நடத்தி வருகிறது.