தமிழ்நாடு

ராமேஸ்வரம்: புண்ணிய தீர்த்தங்களில் நீராட தடை - தரிசனத்துக்கு மட்டும் அனுமதி

ராமேஸ்வரம்: புண்ணிய தீர்த்தங்களில் நீராட தடை - தரிசனத்துக்கு மட்டும் அனுமதி

Veeramani

தமிழகம் முழுவதும் நாளை கோவில்கள் திறக்கப்பட உள்ள நிலையில் ராமேஸ்வரம் ராமநாதசாமி திருக்கோவிலில் கோவிலுக்குள் உள்ள 22 புண்ணிய  தீர்த்தங்களில்  பக்தர்கள் புனித நீராட தடைவிதிக்கப்பட்டிருக்கிறது.

கொரோனா தொற்று பரவல் குறைந்து வருவதை அடுத்து  நாளை முதல் கூடுதல் தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதன் ஒரு பகுதியாக தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் நாளை முதல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் ராமேஸ்வரம் ராமநாதசாமி திருக்கோவிலில் தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. நாளை காலை கோவிலில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். இந்த நிலையில் உள்ளூர் மற்றும் வெளியூரில் இருந்து பக்தர்கள் அதிகளவில் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால்  தனிமனித இடைவெளியை கடைப்பிடித்து சாமி தரிசனம் செய்ய கோவிலுக்குள் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும், கோவிலுக்குள் வரும் பக்தர்களுக்கு கிருமி நாசினி தெளிப்பான் உள்ளிட்ட கருவிகள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் தேங்காய், பூ உள்ளிட்ட பூஜை பொருட்கள் எடுத்து வர அனுமதி இல்லை. அதேபோல், கோவிலுக்குள் உள்ள 22 புண்ணிய தீர்த்தங்களில் நீராடவும் தடை விதிக்க பட்டுள்ளது.