தமிழ்நாடு

ஃபேஸ்புக் அறிமுகத்தால் வாழ்க்கையை தொலைத்த பெண்! நடந்தது என்ன?

Veeramani

ராமநாதபுரத்தில் ஃபேஸ்புக்கில் பழக்கம் ஏற்பட்டு இளைஞரை  பார்க்க வந்த பெண் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தற்கொலை செய்து கொண்டார்.

தூத்துக்குடி மாவட்டம் கணேசபுரம் பகுதியை சேர்ந்த ஐஸ்வர்யாவுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் ஐஸ்வர்யா ஃபேஸ்புக்கில் ராமநாதபுரம் மாவட்டம் கொம்பூதியை சேர்ந்த விஜய் என்பவரிடம் திருமணம் ஆகாதவர் எனக் கூறி  பழகி வந்துள்ளார். நேற்று முன்தினம் விஜயை பார்க்க வந்த போது ஐஸ்வர்யாவுக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் இருப்பது அவருக்கு தெரிய வந்தது.

இதனையடுத்து விஜய் ராமநாதபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஐஸ்வர்யாவை  ஒப்படைத்துள்ளார். மேலும் ஐஸ்வர்யாவின் கணவர் ரெங்கனுக்கு தகவல் தெரிவித்து அவரும் காவல் நிலையம் வந்துள்ளார். ஆனால் ஐஸ்வர்யா, கணவருடன் செல்ல மறுத்துள்ளார்.

ஐஸ்வர்யாவின் வர் ஏற்கெனவே மனைவியை காணவில்லை என திருச்செந்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். எனவே, ஐஸ்வர்யாவை  திருச்செந்தூர் காவல்துறையிடம் ஒப்படைக்க முடிவு செய்த போலீசார், ஒரு நாள் இரவு மட்டும் ராமநாதபுரம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் செயல்படும் பெண்கள் ஆலோசனை வழங்கும் மையத்தில் தங்க வைத்துள்ளனர்.

இந்த நிலையில் இன்று அதிகாலையில் கழிவறையில் ஐஸ்வர்யா தூக்குபோட்டு தற்தொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார்  உடலை கைப்பற்றி  பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.