செய்தியாளர்: அ.ஆனந்தன்
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள சின்ன உடப்பங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார். சி.சி.டிவி மெக்கானிக் ஆன இவர், முதுகுளத்தூரில் இருந்து தனது ஊருக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது தூரி என்ற இடத்தில் உள்ள சாலையில் சிறிய கவர் ஒன்று கிடந்துள்ளது.
அதை எடுத்து அவர் பிரித்துப் பார்த்துள்ளார். அப்போது அதில் புதிய 4.5 பவுன் தங்க நெக்லஸ் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து உடனடியாக முதுகுளத்தூர் பேருந்து நிலையத்தில் உள்ள புறக்காவல் நிலையத்தில் முதுகுளத்தூர் டிஎஸ்பி சண்முகத்திடம் ஒப்படைத்தார்.
இவரது நேர்மையை முதுகுளத்தூர் டிஎஸ்பி மற்றும் காவல் ஆய்வாளர் ஜான்சிராணி உள்ளிட்டோர் பாராட்டினர். இதையடுத்து நகையை தொலைத்தது யார் என்பது குறித்து முதுகுளத்தூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.