சமூகநீதிப் போராளி தியாகி இமானுவேல் சேகரனாரின் 68வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் 7000க்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டுள்ளனர்.
தியாகி இமானுவேல் சேகரனாரின் 68-வது நினைவு தினத்தை முன்னிட்டு ராமாநாதபுரம் பரமக்குடி பகுதியில் அவரது நினைவு இடத்தில் பொதுமக்கள் மரியாதை செலுத்தினர். தொடர்ந்து தமிழக அரசு சார்பில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட அரசியல் கட்சி பிரமுகர்கள் மரியாதை செலுத்தினர். பின்னர் பேசிய உதயநிதி ஸ்டாலின், “தியாகி இமானுவேல் சேகரனாருக்கு 2 மாதங்களில் சிலையும் மணிமண்டபமும் திறக்கப்படும். பரமக்குடியில் நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் மணிமண்டபம் அமைக்கும் பணி 95% முடிவடைந்துள்ளது” எனத் தெரிவித்தார்.
முன்னதாக, ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் பி.என்.எஸ்.எஸ். 163 பிரிவின் கீழ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. காவல்துறை சட்ட ஒழுங்கு ஏடிஜிபி டேவிட்சன் ஆசீர்வாதம் தலைமையில் ஒரு ஐஜி, நான்கு டிஐஜிக்கள், 24 எஸ்பிக்கள், 32 ஏடிஎஸ்பிக்கள், 70 டிஎஸ்பிகள் உள்ளிட்ட 7,435 காவலர்கள் பரமக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். பரமக்குடி நகர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 500 நவீன சிசிடிவி கேமராக்கள் மற்றும் ட்ரோன் கேமராக்கள் மூலமும் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படக்கூடும் என்று கண்டறியப்பட்ட 161 பகுதிகள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து இமானுவேல் சேகரனார் நினைவிடத்திற்கு வருபவர்கள் இருசக்கர வாகனத்தில் வரக்கூடாது என்றும் வாகனத்தின் மேற்கூரையில் ஏறி பயணிக்கக் கூடாது உள்ளிட்ட கட்டுப்பாடுகளை காவல்துறை விதித்துள்ளது,
அதிமுகவிற்கு அனுமதி மறுப்பு:
இமானுவேல் சேகரனார் 68-வது நினைவு தினத்தில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், ராஜலட்சுமி உட்பட பலர் கலந்து கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், செப்டம்பர் 11ஆம் தேதி பரமக்குடியில் உள்ள தியாகி இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் அதிமுக சார்பில் யாரும் அஞ்சலி செலுத்த அனுமதிக்க மாட்டோம், மீறி வருகை வரும் பட்சத்தில் சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டால் அதற்கு தேவேந்திர பண்பாட்டு கழகம் பொறுப்பேற்காது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடமும் மனு அளிக்கப்பட்டிருந்தது.