தமிழ்நாடு

தேங்கிய கழிவுநீரை அகற்ற முடியுமா முடியாதா? - சாலையிலேயே தர்ணாவில் ஈடுபட்ட அதிமுக எம்.எல்.ஏ

தேங்கிய கழிவுநீரை அகற்ற முடியுமா முடியாதா? - சாலையிலேயே தர்ணாவில் ஈடுபட்ட அதிமுக எம்.எல்.ஏ

kaleelrahman

ராமநாதபுரம் நகராட்சி பகுதியில் தேங்கியுள்ள கழிவுநீரை அகற்ற சட்டமன்ற உறுப்பினர் மணிகண்டன் தர்ணா போராட்டம் நடத்தினார்

கடந்த வாரம் முதல் தொடர்ச்சியாக பெய்துவரும் மழையால் ராமநாதபுரம் நகர் முழுவதும் உள்ள சாலைகள் மற்றும் தெருக்களில் மழை நீரும் கழிவு நீரும் சேர்ந்து துர்நாற்றம் வீசிவருகிறது. இதனால் பொது மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவதோடு இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால், சுகாதாரக்கேடு ஏற்படுவதாக எழுந்த புகாரை அடுத்து அந்த பகுதிகளுக்குச் சென்று ஆய்வு செய்த ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் மணிகண்டன், உடனடியாக அப்பகுதிகளில் தேங்கியிருக்கும் கழிவுநீரை அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். ஆனால் அதிகாரிகள் போதிய ஒத்துழைப்பு கொடுக்க வில்லை எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், ஆளும் கட்சி சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான மணிகண்டன் தனது வீட்டுக்கு செல்லும் வழியில் கழிவு நீர் தேங்கி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வரும் பகுதியில் அமைந்துள்ள வீட்டு வாசல்படியில் அமர்ந்து கழிவு நீரை வெளியேற்றும் வரை எழுந்திருக்க மாட்டேன் என தர்ணா போராட்டம் நடத்தினார்.

இதனால் அப்பகுதியில் திடீரென பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து நகராட்சி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து சட்டமன்ற உறுப்பினரை சமாதானம் செய்தனர். அப்போது அவர், நான் பலமுறை கூறியும் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளாத நீங்கள் பொதுமக்களின் கோரிக்கையை எவ்வாறு தீர்த்து வைப்பீர்கள் என அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினார்.

இதனையடுத்து நகராட்சி ஊழியர்கள் ராட்சத மோட்டார் வைத்து கழிவு நீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து தலைமை பொறியாளர் திலேஷ்வரிடம் கேட்டபோது, ராமநாதபுரத்தில் 6 செ.மீ மேல் தொடர்ச்சியாக மழைபெய்து வருவதால் கழிவு நீர் சூழ்ந்துள்ளது. நகராட்சியில் கழிவு நீரை அகற்றுவதற்கான வாகன வசதி இல்லாததால் தனியார் வாகனங்கள் மூலம் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தேங்கிய நீரை அகற்றி கொண்டுதான் வருகிறோம்.

இருப்பினும் எம்எல்ஏ போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் அந்த பகுதியில் தீவிரமாக கழிவுநீரை அகற்றும் பணி தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. மேலும் நகர் முழுவதும் தேங்கியுள்ள கழிவுநீரை முடிந்த அளவு உடனடியாக அகற்ற துரித நடவடிக்கையில் அதிகாரிகளும், ஊழியர்களும் ஈடுபட்டு வருவதாக தெரிவித்தார்.