ramadoss, sasikala PT
தமிழ்நாடு

தமிழகத்தில் 5 முனைப் போட்டி.. கூட்டணி அமைத்த ராமதாஸ், சசிகலா! சூடுபிடிக்கும் தேர்தல் களம்!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அரசியல் களம் நாளுக்கு நாள் சூடுபிடித்து வருகிறது.

Prakash J

சசிகலாவும், ராமதாஸும் இன்று சந்தித்துப் பேசினர். இதைத் தொடர்ந்து, இந்தத் தேர்தலில் கூட்டணி அமைத்துப் போட்டியிடுவதாக இருவரும் தெரிவித்துள்ளனர். இதன்மூலம், தமிழகத்தில் ஐந்து முனைப் போட்டி நிலவியுள்ளது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அரசியல் களம் நாளுக்கு நாள் சூடுபிடித்து வருகிறது. ஆளும் திமுக மீண்டும் ஆட்சியை தக்கவைக்கும் நோக்கில் 26 கட்சிகளுடன் மெகா கூட்டணியை அமைத்திருக்கிறது. அதேபோல, எதிர்க்கட்சியான அதிமுகவும், பாஜக, அமமுக உள்ளிட்ட 14 கட்சிகளுடன் மிகப்பெரிய கூட்டணியை அமைத்து ஆட்சியை கைப்பற்றும் நோக்கில் பரபரப்பாக செயல்பட்டு வருகிறது. இதுதவிர, ஆட்சியில் பங்கு தருவோம் எனக் கூறிய நிலையிலும் நடிகர் விஜயின் கட்சியுடன் யாரும் கூட்டணி வைக்காத நிலையில், அது தனித்து விடப்பட்டுள்ளது. அதேநேரத்தில், ஆண்டாண்டுக் காலமாக தனித்தே போட்டியிடும் சீமானின் நாம் தமிழர் கட்சியும் தேர்தல் களத்தில் உள்ளது.

ramadoss, sasikala

முன்னதாக, ஓபிஎஸ்., சசிகலா, ராமதாஸ் ஆகியோர் தனித்து விடப்பட்ட நிலையில், அவர்களின் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என எதிர்பார்ப்பு எகிறியது. இந்த நிலையில், ஓபிஎஸ் திமுகவில் சரணடைந்தார். இதற்கிடையே சசிகலா புதிய கட்சியைத் தொடங்கினார். மறுபுறம், கூட்டணி குறித்து விரைவில் அறிவிப்பதாக ராமதாஸ் தரப்பு கூறியிருந்தார். இந்த நிலையில், சசிகலாவும், ராமதாஸும் இன்று சந்தித்துப் பேசினர். இதைத் தொடர்ந்து, இந்தத் தேர்தலில் கூட்டணி அமைத்துப் போட்டியிடுவதாக இருவரும் தெரிவித்துள்ளனர். இதன்மூலம், தமிழகத்தில் ஐந்து முனைப் போட்டி நிலவியுள்ளது.

கூட்டணி குறித்துப் பேசிய ராமதாஸ், “எங்கள் கொள்கையில் இருக்கும் கட்சிகள் எங்களுடன் கூட்டணிக்கு வரலாம். அப்படி வரும் பட்சத்தில், நானும் சசிகலாவும் அம்மையாரும் இணைந்து அதுகுறித்து முடிவெடுப்போம். தமிழக மக்களுக்கு நல்லது நடக்க வேண்டும் என்ற கொள்கையின் அடிப்படையிலேயே இந்தக் கூட்டணியை அமைத்துள்ளோம். சிலநேரங்களில் சில கால தாமதங்கள் நடப்பது உண்டு. அந்த வகையில், இந்த கூட்டணி கால தாமதம் ஆகியுள்ளது” என்றார். அவரிடம், எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவீர்கள் என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், “235” எனச் சொல்லியபடியே சிரித்தார்.

முன்னதாக, பாமக நிறுவனர் ராமதாஸின் மகனும், அக்கட்சியின் தலைவருமான அன்புமணி, அதிமுக கூட்டணியில் அங்கம் வகித்துள்ளார். பாமக தலைமை தொடர்பாக இரு தரப்பினரிடமும் மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.