பாமக தலைமை நிர்வாகக்குழுவில் இருந்து அன்புமணியை நீக்கி அதிரடி காட்டியிருக்கிறார் பாமக நிறுவனர் ராமதாஸ். கட்சியில் தந்தைக்கும் மகனுக்குமான மோதல் போக்கு தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், உச்சபட்சமாக அன்புமணி பெயர் நீக்கப்பட்டுள்ளது. கட்சியின் விதி என்ன சொல்கிறது? இந்த முடிவு பாமகவில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விரிவாக பார்க்கலாம்.
பாமக நிறுவனர் ராமதாசுக்கும், அன்புமணி ராமதாசுக்கும் இடையே மோதல் போக்கு இருந்து வருவதால் கட்சித் தொண்டர்களிடையே குழப்பமான சூழல் நிலவுகிறது. ராமதாஸ் ஒரு பக்கம் நிர்வாகிகளை மாற்றினால், மறுபுறம் அவர்கள் தொடர்வார்கள் என்று அறிவிப்பு வெளியிட்டு வருகிறார் அன்புமணி ராமதாஸ். அன்புமணியை செயல் தலைவராக நியமித்த ராமதாஸ், தானே நிரந்தர தலைவர் என்று ஆணித்தரமாக கூறி வருகிறார். இந்த நிலையில்தான், பாமகவில் தலைமை நிர்வாகக்குழு அதிரடியாக கலைக்கப்பட்டுள்ளது.
தைலாபுரம் இல்லத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில், பாமக தலைமை நிர்வாக குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. பாமக நிர்வாக குழுவில் இடம்பெற்றிருந்த வடிவேல் ராவணன், திலகபாமா, வழக்கறிஞர் பாலு ஆகியோர் நீக்கப்பட்டு, புதியதாக மருத்துவர் ராமதாசால் நியமிக்கபட்ட நிர்வாகிகள் கொண்டு கூட்டம் நடத்தப்பட்டது. நிர்வாக குழு கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பெயர் இருந்த நிலையில், அவர் நிர்வாக குழு கூட்டத்தில் பங்கேற்காமல் புறக்கணித்தார்.
தொடர்ந்து, ஏற்கனவே இருந்த 19 பேர் கொண்ட நிர்வாக குழு கலைக்கப்பட்டு, புதியதாக உருவாக்கப்பட்ட நிர்வாக குழுவில் 21 பேர் இடம்பெற்றுள்ளனர். இந்த நிர்வாக குழுவில் புதியதாக போடப்பட்ட பொதுச்செயலாளர் முரளி சங்கர், பொருளாளர் சையத் மன்சூர் உசேன், கரூர் பாஸ்கரன், சேலம் மேற்கு எம்எல்ஏ அருள் உள்ளிட்ட 21 பேர் இடம் பெற்றுள்ளனர்.
ஆனால், இதில் செயல் தலைவராக அறிவிக்கப்பட்ட அன்புமணியின் பெயர் சேர்க்கப்படாமல் நீக்கப்பட்டுள்ளது. கட்சியில் அன்புமணி ஏற்கனவே பல கூட்டங்களை புறக்கணித்த நிலையில், நிர்வாக குழு கூட்டத்தையும் புறக்கணித்ததால், அவரது பெயர் நீக்கம் செய்யபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாமகவின் விதிப்படி, கட்சியை உருவாக்கிய நிறுவனர் ராமதாஸுக்கே அனைத்து அதிகாரங்களும் வழங்கப்பட்டுள்ளதால், அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார் ராமதாஸ்.
இந்த முடிவு கட்சிக்குள் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்று மூத்த பத்திரிகையாளர் ப்ரியனிடம் பேசினோம், அப்போது, “பாமக பொதுக்குழு கூட்டப்பட்டே அன்புமணி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.. பொதுக்குழுவை கூட்ட நிறுவனர் ராமதாஸுக்கு அதிகாரம் இருந்தாலும், முடிவுகள் அனைத்தும் அன்புமணியிடமே இருப்பதை புரிந்துகொள்ள முடிகிறது. தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட பாமக தலைவராக இருக்கிறார் அன்புமணி. அவ்வளவு ஏன், எம்.எல்.ஏ அருளை நீக்கியபோதும் சபாநாயகருக்கு அன்புமணியே கடிதம் அனுப்பினார். அந்த வகையில், குடும்பத்தில் வெடித்த மோதல் கட்சியில் பெரிய பிரச்னையை ஏற்படுத்தியுள்ளது. இந்த மோதல் எப்போது தீரும் என்பதே தொண்டர்களின் எண்ணம்.. தேர்தலை எதிர்கொள்ள இந்த பிரச்னைகள் விரைவில் முடிவுக்கு வர வேண்டும் என்பதே பாமகவினரின் விருப்பமாக இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.