ரமலான் நோன்பு நாளை முதல் கடைப்பிடிக்கப்படும் நிலையில், இஸ்லாமியர்கள் தொழுகைக்காக மசூதிகளுக்கு வர வேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதுவரை 23.400 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் 723 கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் நோக்கில் மே 3 ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் 1683 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, 20 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனாவால் உலகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால், கடைகள், வணிக நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்கள் ஆகியவை மூடப்பட்டுள்ளன. விழாக்கள் மற்றும் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளன. திருமணங்களும் சில கட்டுப்பாடுகளுடன் நடத்தப்பட்டு வருகின்றன.
ரமலான் நோன்பு நாளை முதல் கடைப்பிடிக்கப்படவுள்ள நிலையில், இஸ்லாமியர்கள் மசூதிக்கு வருவதைத் தவிர்க்க வேண்டும் என மசூதி நிர்வாகிகள் கேட்டுக் கொண்டுள்ளனர். டெல்லி ஜூம்மா மசூதி உள்ளிட்ட மசூதிகள் மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.சென்னை திருவல்லிக்கேணியில் இருக்கும் பெரிய மசூதியும் மூடப்பட்டுள்ளது.