சட்டப்பேரவைத் தேர்தலுடன் மாநிலங்களவை தேர்தல் நடைபெறவிருப்பதால், இந்த தேர்தல் கூட்டணிகளின் அரசியல் நிலைப்பாட்டை மாற்றக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாடு, மேற்கு வங்கம், மகாராஷ்டிரா உள்ளிட்ட 10 மாநிலங்களில், காலியாகவுள்ள 37 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் மார்ச் 16ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதுகுறித்து, தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் பிப்ரவரி 26ஆம் தொடங்கி மார்ச் 5 வரை நடைபெறும் எனவும், வாக்கு எண்ணிக்கை மார்ச் 16ஆம் தேதி நடைபெற்று, அன்று மாலை வாக்கு எண்ணிக்கை நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், திமுகவின் திருச்சி சிவா, என்.ஆர். இளங்கோ, அந்தியூர் செல்வராஜ், கனிமொழி சோமு, அதிமுக தம்பிதுரை, தமாகா ஜிகே வாசன் ஆகியோரின் பதவிக்காலம் ஏப்ரல் 2ஆம் தேதியுடன் நிறைவடையவுள்ளது. இதையடுத்து, இவர்களின் இடங்களுக்கான தேர்தல் மார்ச் 16 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில், 4 இடங்கள் திமுகவுக்கும், 2 இடங்கள் அதிமுகவுக்கும் உள்ளன. தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுடன் இத்தேர்தலும் நடக்கவிருப்பதால், மாநிலங்களவைத் தேர்தலின் மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே, திமுக மற்றும் அதிமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் சட்டப்பேரவைத் தொகுதிகளுடன், மாநிலங்களைவை உறுப்பினர் பதவிகளையும் கேட்டு வரும் நிலையில், மாநிலங்களவைத் தேர்தல் அதிமுக மற்றும் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளிடையேயும், கூட்டணிக்கு வெளியே உள்ள கட்சிகளிடையேயும் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது.