தமிழ்நாடு

''தமாகா உள்ளே; தேமுதிக வெளியே'' - முடிவுக்கு வந்த எம்பி சீட் ஆடுபுலி ஆட்டம்!

''தமாகா உள்ளே; தேமுதிக வெளியே'' - முடிவுக்கு வந்த எம்பி சீட் ஆடுபுலி ஆட்டம்!

webteam

தற்போதைய மாநிலங்களவை உறுப்பினர்கள் 6 பேரின் பதவிக்காலம் வரும் ஏப்ரல் 2-ம் தேதி முடிவடைகிறது. இந்த 6 மாநிலங்களவை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வரும் மார்ச் 26-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் வரும் மார்ச் 6 முதல் 13 வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது.

முன்னதாக திமுக தங்களது வேட்பாளர்களை அறிவித்தது. திருச்சி சிவாவுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டது. அதேபோல் முன்னாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜ், வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ ஆகியோர் புதிய நபர்களாக அறிவிக்கப்பட்டனர். ஆனால், ஆளும் கட்சியான அதிமுக வேட்பாளர்களை அறிவிக்காமல் இருந்தது. கூட்டணி கட்சிகளுக்கு அதிமுக வாய்ப்பு அளிக்குமா? என்ற கேள்வியும் எழுந்தது. குறிப்பாக தேமுதிக ஒரு சீட்டை பெற்றுவிட வேண்டும் என்று தீவிரமாக முயற்சி செய்தது.

“தேர்தலில் கூட்டணி அமைக்கும்போது அதிமுகவினர் மாநிலங்களவை உறுப்பினர் பதவி கொடுப்பதாகக் கூறினார்கள். நாங்கள் கூட்டணி தர்மத்தோடு இருக்கிறோம்'' என பிரேமலதா விஜயகாந்த் கூறினார். தேமுதிகவின் கோரிக்கை குறித்து பதிலளித்த தமிழக முதலமைச்சர் “வீட்டில் பெண் இருந்தால் திருமணம் செய்ய கேட்பதைபோல், கூட்டணி கட்சியினரும் சீட் கேட்கதான் செய்வார்கள்”என்று பொத்தாம்பொதுவாக பதிலளித்து தேமுதிகவின் நம்பிக்கையை உடைத்தார். இதற்கிடையே “தேமுதிகவுக்கு எம்பி பதவி தருவதாக அதிமுக ஒப்பந்தம் ஏதும் செய்யவில்லை'' என அமைச்சர் ஜெயக்குமாரும் தெரிவித்தார்.

இப்படி தேமுதிகவுக்கு சீட் கிடைப்பது கனவாகிக் கொண்டிருந்த நேரத்தில் தேமுதிகவின் சுதீஷ்,  முதலமைச்சரையும், துணை முதல்வரையும் வீட்டிற்கு சென்றே சந்தித்தார். இதனால் தேமுதிகவுக்கு அதிமுக சீட் வழங்குமா என்ற எதிர்ப்பார்ப்பு நிலவி வந்தது. இந்நிலையில் இன்று அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள் பட்டியலில் கே.பி.முனுசாமி, தம்பிதுரை மற்றும் ஜி.கே.வாசன் ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. தேமுதிக இடம் பெறவில்லை. கூட்டணி கட்சியான தமாகாவின் தலைவர் ஜிகே வாசனுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

மாநிலங்களவை சீட் குறித்து நேரடியாகவே பல கோரிக்கைகள் விடுக்கப்பட்டும், பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டும் கூட தேமுதிகவுக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. ஆனால் தேமுதிகவிடம் சுமூக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டே இந்த முடிவை அதிமுக எடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.