தமிழ்நாடு

''ஒரு சாதாரண பஸ் கண்டக்டர் நான்...'' - 2013-ம் ஆண்டே அதிசயம் குறித்து பேசிய ரஜினிகாந்த்!

webteam

2013-ம் ஆண்டு விருது விழா ஒன்றில் தன் வாழ்வின் அதிசயம் குறித்து பேசிய ரஜினிகாந்தின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

சினிமாவில் நடிகர் கமல்ஹாசன் 60 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதைக் கொண்டாடும் வகையில் 'உங்கள் நான்' எனும் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர்கள் ரஜினிகாந்த் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய ரஜினிகாந்த், “எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் ஆவோம் என கனவில் கூட நினைத்திருக்கமாட்டோம். ஆனால் அதிசயம் நடந்தது. தமிழக அரசு நான்கைந்து மாதங்களில் கவிழ்ந்துவிடும் என்று 99 சதவீதம் பேர் சொன்னார்கள். ஆனால் அதிசயம் நடந்து தடைகளை தாண்டி ஆட்சி நீடித்து வருகிறது. அதைபோன்ற அதிசயம் இன்றும் நடக்கிறது. நாளையும் நடக்கும்” என்றார். 

இது குறித்து பேருந்து நடத்துநராக வாழ்க்கையைத் தொடங்கிய ரஜினிகாந்த், கன்னித்தமிழ் பூமியின் சூப்பர் ஸ்டார் ஆவோம் என கனவில்கூட நினைத்திருக்க மாட்டார் என அதிமுகவின் நாளேடான நமது அம்மா தெரிவித்துள்ளது. ‘ஆச்சரியம் பூச்சொரியும் எடப்பாடியாரும், சூசக ஆரூடம் சொன்ன சூப்பர் ஸ்டாரும்’ என்ற தலைப்பில் நமது அம்மா நாளேட்டில் கட்டுரை வெளியாகியுள்ளது. 

எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி நீடிக்கும் அதிசயம் தொடரும் என்பதைத்தான் நாளையும் நடக்கப்போகிற அதிசயம் என ரஜினிகாந்த் சூசகமாக கூறியிருப்பதாக நமது அம்மா தெரிவித்துள்ளது. மேலும், முதலமைச்சர் பதவி என்பது சினிமாவின் முதல் காட்சியில் ஆசைப்‌பட்டு மூன்றாவது காட்சியிலேயே கைக்கு எட்டி விடுகிற கற்பனை நாற்காலியல்ல என கமலுக்கும் ரஜினி சுட்டிக்காட்டியிருப்பதாக கட்டுரையில் கூறப்பட்டுள்ளது. 

பேருந்து நடத்துநராக வாழ்க்கையை தொடங்கிய ரஜினியும் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ஆவோம் என கனவில் கூட நினைத்திருக்க மாட்டார் என்று கூறியுள்ள நமது அம்மா, சினிமா வாய்ப்பு வரும் முன்பே முதல்வராக ஆசைப்படும் ரீல் தலைவர்களுக்கு மத்தியில் எடப்பாடி பழனிசாமி ஒரு ரியல் தலைவர் என்பதை வரலாறு உணர்த்துவதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையே ரஜினி தன் வாழ்வில் ஏற்பட்டதே ஒரு அதிசயம் என 2013-ம் ஆண்டே மேடையில் பேசியுள்ளார்.  விருது விழா ஒன்றில் பேசும் ரஜினி, ''பலருக்கும் அதிசயங்களில் நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம். ஆனால் அதிசயங்கள் நடக்கும். ஒரு சாதாரண பஸ் கண்டக்டர் இத்தனை உயர்ந்த மனிதர்களோடு ஒரே மேடையில் இருப்பதே அதிசயம்தான்'' என தெரிவித்துள்ளார். அது தொடர்பான வீடியோவும் தற்போது வைரலாகி வருகிறது.