ராஜீவ் கொலைக் குற்றவாளி நளினி, தனது மகள் திருமணத்துக்காக பரோல் கேட்டு தாக்கல் செய்த மனுவில் சிறைத்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டணை பெற்று சிறையிலுள்ள நளினி, தன் மகளின் திருமணத்திற்காக 6 மாதம் பரோல் வழங்கக்கோரி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். பரோல் கோரிய மனு மீதான விசாரணையின் போது தானே ஆஜராகி வாதாட வேண்டும் எனக் கூடுதல் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். மனுவில், தன்னை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த தமிழக அரசுக்கும், சிறைத்துறைக்கும் உத்தரவிடுமாறு கோரிக்கை விடுத்திருந்தார்.
வழக்கு இன்று நீதிபதிகள் எம்.சத்யநாராயணன் மற்றும் எம்.நிர்மல்குமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது. நளினி தாக்கல் செய்த கூடுதல் மனுவிற்கு தமிழக உள்துறைச் செயலாளர், சிறைத்துறை டிஜிபி மற்றும் வேலூர் சிறைக் கண்காணிப்பாளர் ஆகியோர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம், வழக்கை ஜூன் 11ஆம் தேதி ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது. முன்கூட்டியே பரோல் தேவைப்பட்டால் கோடை விடுமுறை கால சிறப்பு நீதிமன்றத்தை அணுகலாம் எனவும் நளினிக்கு அறிவுறுத்தியுள்ளது.