தமிழ்நாடு

பேரறிவாளன் விடுதலை கோரி ஆளுநரிடம் தா.பாண்டியன் மனு

பேரறிவாளன் விடுதலை கோரி ஆளுநரிடம் தா.பாண்டியன் மனு

webteam

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்திடம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் தா.பாண்டியன் மனு கொடுத்துள்ளார்.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், முருகன், நளினி உள்ளிட்ட 7 பேருக்கு விதிக்கப்பட்ட மரணதண்டனை, ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டதையடுத்து, அவர்களை விடுவிடுக்க தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றியது. அதனை எதிர்த்து மத்திய அரசு மேல்முறையீடு செய்தது. அதில், சட்டப்பிரிவு 435-ன் படி சிபிஐ விசாரித்த வழக்கு என்பதால் மத்திய அரசின் ஒப்புதலுடனே 7 பேரை விடுவிக்க வேண்டும் என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மீண்டும் 7 பேர் விடுதலை தொடர்பாக மத்திய அரசுக்கு, தமிழக அரசு பரிந்துரை கடிதம் அனுப்பியது. அதற்கு, 7 பேரையும் விடுவிக்க முடியாது எனக்கூறி தமிழக அரசின் கோரிக்கையை ஏப்ரல் 14-ஆம் தேதி மத்திய அரசு நிராகரித்தது. இதனால் உச்சநீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள மத்திய அரசின் மேல்முறையீட்டு வழக்கை முடித்து வைக்க பேரறிவாளன் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதனை ஏற்று வழக்கு முடித்து வைக்கப்பட்டது. இதில், சட்டப்பிரிவு 161-ன்படி 7 பேர் விடுதலை தொடர்பாக ஆளுநரிடம் பரிந்துரைக்க தமிழக அரசுக்கு அதிகாரம் வழங்கப்பட்டது.

இதையடுத்து, தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி, 7 பேரையும் விடுதலை செய்வது குறித்து கவர்னருக்கு பரிந்துரை செய்யப்பட்டது. அந்தப் பரிந்துரை மீது கவர்னர் காலம் தாழ்த்தாமல் முடிவெடுக்க வேண்டும் என பல்வேறு கட்சியினரும் கூறினர். ஆனால் ஆளுநர் மாளிகை, ராஜீவ் வழக்கு மிகவும் சிக்கலான ஒன்று. விடுதலை தொடர்பாக சட்ட, அரசியல் சாசன, நிர்வாக ரீதியிலான ஆய்வுகள் தேவை. விடுதலை செய்யக் கோரிய பரிந்துரையோடு மாநில அரசு சார்பில் அதிக அளவில் ஆவணங்கள் அனுப்பப்பட்டுள்ளன. உரிய கவனம் கொடுக்கப்பட்டு சரியான முடிவெடுக்கப்படும். தேவைப்படும் பட்சத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்படும் என்று கூறியது.

இந்நிலையில் ராஜீவ் கொலை வழக்கில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ள 7 பேரையும் விடுவிக்க வேண்டும் என தா.பாண்டியன் கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் தமிழக ஆளுநருக்கு கடிதம் எழுதியுள்ளார்.